என் மலர்
உலகம்
ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு
- புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.
- குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக அமைந்துள்ளது செல்போன்... உணவு, தூக்கம் இல்லாமல் கூட இருந்திடலாம்.. ஆனால் செல்போன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியாது என்றாகிவிட்டது.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பல ஆய்வு முடிவுகள் வெளிவந்தாலும் அதனை கண்டுகொள்வதில்லை. இதனால் அதிரடி நடவடிக்கையில் ஸ்பெயின் அரசு இறங்கி உள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விற்கப்படும் செல்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை விரைவில் பார்க்கலாம். அதாவது, செல்போன்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதில் எழுதப்பட்டிருக்கும். புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.
செல்போன் உபயோகிப்பதை 'பொது சுகாதார தொற்றுநோய்' எனக்குறிப்பிட்டுள்ள அரசு, நாட்டு மக்கள் அதிக நேரம் மொபைலை உபயோகிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பை எடுக்க உள்ளது.
இதில் மொபைல் போன்களின் தீய விளைவுகள் பற்றி இடம்பெறும். இதற்காக 250 பக்க அறிக்கை தயாரிக்க 50 பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
13 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 வயது வரை டிஜிட்டல் சாதனம் கொடுக்கக்கூடாது. 6 வயது குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செல்போன் கொடுக்க வேண்டும். இது தவிர, 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.