search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென் கொரிய பெண் இலக்கியவாதி ஹான் காங்.. எழுத்தும் பின்னணியும்!
    X

    நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென் கொரிய பெண் இலக்கியவாதி ஹான் காங்.. எழுத்தும் பின்னணியும்!

    • தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை.
    • மக்களின் வலி, வலராறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும்.

    நோபல் பரிசு

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் [2024] இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார்.

    வன்முறை - துயரம்

    53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ' தி வெஜிடேரியன்' [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார். இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர்' சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன. தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை. இதுபோல 'தி ஒயிட் புக்', 'ஹ்யூமன் ஆக்ட்ஸ்', 'கிரீக் லெசன்ஸ்' ஆகியவையும் ஹான் காங் எழுதிய மற்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்.

    ஹான் காங்

    1970 ஆம் ஆண்டு தென் கொரியாவின் குவாங்ஜூ-ல் (Gwangju) பிறந்த ஹான் காங் அரசியல் காரணங்களால் சியோலுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது இளமைக் காலத்தை செலவிட்ட அவர் தனது தந்தை மூலம் இலக்கியத்துக்கு அறிமுகமாகிறார்.இவரது தந்தையும் நாவலாசிரியர் என்பதால் சிறுவயதிலிருந்தே இருந்த புத்தகங்கள் சூழ்ந்த சூழலில் இலக்கியத்துக்கு நெருக்கமானவராக ஹான் காங் வளர்ந்தார். வளர்ந்த பின் சியோலில் உள்ள யோன்சேய் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

    1992 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஹான் காங் அதுமுதல் எண்ணற்ற படைப்புக்களை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். மக்களின் வலி, வலராறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும். 2014 ஆம் ஆண்டில் வெளியான ஹியூமன் ஆக்ட்ஸ் என்ற இவரது நாவல் 1980களில் தென் கொரியாவில் ராணுவத்தால் கொல்லப்பட்ட குவாங்ஜு மக்களின் வாழ்க்கையைப் பற்றியது ஆகும்.

    தொந்தரவு

    தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள இந்த 53 வயது எழுத்தாளரைத் தென் கோரிய அரசும் மக்களும் கொண்டாடி வருகிறனர். ஆனால் எந்த கொண்டாட்டங்களில் ஈடுபட ஹான் காங் விரும்பவில்லை. நோபல் பரிசு பெற்றது குறித்து எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்க மறுத்துள்ளார். இது அவரின் தீர்க்கமான முடிவு என்று ஹான் காங் தாயார் தெரிவிக்கிறார். உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றில் நடந்துவரும் போர் தனது மகளை மிகுந்த தொந்தரவு செய்துள்ளதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

    'போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொலை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும், செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?' என தன் மகள் தன்னிடம் கேட்டதாகத் தந்தை கூறுகிறார். மேலும் உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியைப் பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை.

    நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையாக இருந்தால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதை நாம் எழுப்பாமல் இருக்க முடியாது ' என தனது மகள் கூறி கொண்டாட்டங்களுக்கு மறுத்துவிட்டதாகத் தந்தை கூறுகிறார்.

    Next Story
    ×