search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

    • சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார் திசநாயகே.

    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அருரா குமார திசநாயகே ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள 13,400 வாக்குச்சாவடிகளில் வரும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 1.7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர்.

    தேர்தலை முன்னிட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த பிரசார பணிகள் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தன.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் அருரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்று 22-ம் தேதி நாங்கள் ஆட்சி அமைப்போம். வெற்றிக்குப் பிறகு என்.பி.பி. கட்சி முழுமையான நிர்வாகத்தையும், சமூக மாற்றத்தையும் கொண்டு வரும்.

    தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் உள்பட அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் முழு ஆதரவைப் பெற்றுள்ளோம். கடுமையான போராட்டங்களின்போது வெறும் கனவாக மட்டுமே இருந்த உண்மையான இலங்கை அரசாங்கம், இனி நம்முடையதாக இருக்கும் என தெரிவித்தார்.

    தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று நடந்த பிரசாரத்தில் பேசுகையில், சர்வதேச நாணய நிதியத்தின்கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கை, நமது நாட்டை மற்றொரு பொருளாதார நெருக்கடியில் இருந்து தடுப்பதற்கு மிகவும் முக்கியமாகும். திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசாவின் கொள்கைகள் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.

    மற்றொரு அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா, சுமார் 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். செழிப்பான பொருளாதாரத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவோம். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.

    Next Story
    ×