search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரூ.625 கோடி இழக்க போகிறதா எக்ஸ்? -  மஸ்க் தீவிர ஆலோசனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரூ.625 கோடி இழக்க போகிறதா எக்ஸ்? - மஸ்க் தீவிர ஆலோசனை

    • 2022 அக்டோபர் மாதம், எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
    • யூதர்களுக்கு எதிரான கருத்தை ஆமோதித்து மஸ்க் பதிவிட்டார்

    கருத்து பரிமாற்றங்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்த டுவிட்டரை, அமெரிக்காவின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன் ஒரு பகுதியாக நிறுவன பெயரை எக்ஸ் என மாற்றினார். தொடர்ந்து தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். பல பொறுப்புகளில் புதிய பணியாளர்களை நியமித்தார்.

    ஆனால், மஸ்கின் மாற்றங்களால் நிறுவனத்தின் வருமானம் அவர் எதிர்பார்த்ததை போல் அதிகரிப்பதற்கு பதிலாக குறைய தொடங்கியது. எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் முக்கிய வருமானமான விளம்பர வருவாய் குறைந்து வந்தது.

    அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்தகைய எக்ஸ் பதிவு ஒன்றில் யூதர்களுக்கு எதிரான கருத்தை ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். இதனை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் ஒரு கருத்தை பதிவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஊடக விவகாரங்களை கவனித்து செய்தி வெளியிடும் மீடியா மேட்டர்ஸ் எனும் நிறுவனம், எக்ஸ் தளத்தில் யூதர்களை இனப்படுகொலை செய்த ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியினரை பெருமைப்படுத்தும் எக்ஸ் பதிவுகளுக்கு அருகில் ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளிவருவதை சுட்டி காட்டியிருந்தது.

    இதையடுத்து எக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரங்களை தந்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை நிறுத்தி விட்டன.

    இதனால் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.625 கோடி ($75 மில்லியன்) தொகை வரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து, வருவாய் இழப்பை தடுக்க எலான் மஸ்க் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×