search icon
என் மலர்tooltip icon

    சூடான்

    • சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    கார்ட்டூம்:

    சூடான் நாட்டில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

    ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த பணியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 16 விமானங்கள் மற்றும் 5 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    மீட்கப்படும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    இன்று இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    கடந்த 9 நாட்களில் சூடானில் இருந்து வெற்றிகரமாக 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

    • ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவமும், துணை ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள். 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகிறார்கள்.

    இந்த சண்டையில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சூடானில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா.சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள், கப்பல், விமானங்களை அனுப்பி தங்களது குடிமக்களை மீட்டு வருகின்றன.

    போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் தொடர்ந்து சண்டை நடந்தது. இதற்கிடையே பேச்சு வார்த்தைக்கு ராணுவ தளபதியும், துணை ராணுவ தளபதியும் ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதம் வழங்கி உள்ளனர்.

    அதன்படி மே 4-ந்தேதி (நாளை) முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதற்காக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் மயார்தீத்துடன் இரு தரப்பினரும் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் விவரங்கள், தேதி, இடம் ஆகியவற்றை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    • சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கபட்டது.
    • போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கெய்ரோ:

    சூடான் நாட்டில் ராணு வத்தினருக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த 15-ந்தேதி தொடங்கிய இந்த போர் 3- வது வாரமாக நீடிக்கிறது.

    சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கபட்டது. இதையடுத்து மற்ற நாட்டினர் சூடானில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

    இரு தரப்பு ராணுவத்தினரும் போர் நிறுத்தத்தை நீட்டித்த போதிலும் அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டுதான் உள்ளது. தலைநகர் கார்ட்டூம் உள்பட பல இடங்களில் இன்னும் துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே தான் உள்ளது. அங்குள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே சண்டை நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்த சண்டையால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. உணவு பொருட்களுக்கும் கடுமையாக பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

    சூடானில் 3-ல் ஒரு பங்கு ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் போரில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதையடுத்து சூடானில் காயம் அடைந்தர்களுக்கு உதவும் வகையில் செஞ்சிலுவை சங்கம் மூலம் 8 டன் மருந்து பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஜோர்டானில் இருந்து போர்ட் சூடானுக்கு விமானம் மூலம் இந்த மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    • சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
    • சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டுமழை பொழிந்தது.

    கார்டூம் :

    ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது.

    இந்த உள்நாட்டு போர் காரணமாக சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டுமழை பொழிந்தது. இதனால் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்பட பலர் உயிரிழந்தனர். எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனையேற்று இரு தரப்பினரும் தற்காலிகமாக போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனை பயன்படுத்தி இந்தியா உள்பட பல நாடுகள் தங்களது நாட்டின் தூதரக அதிகாரிகள், பொதுமக்களை விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    ஆனால் 3 வாரங்களை தாண்டி நடந்து வரும் இந்த உள்நாட்டு போரால் தற்போது அங்கு பலியானோரின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும் தலைநகர் கார்டூம் மற்றும் மேற்கு டார்பூர் தவிர பெரும்பாலான மாகாணங்களில் போர் நிறுத்த நடவடிக்கையானது தற்போது அமைதியை கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் சண்டையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்து உள்ளது.
    • போராட்டக்காரர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கெய்ரோ:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்துள்ளது. அங்குள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த 15-ந் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சூடான் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இருபடையினரும் 3 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்து இருந்தனர். இதையடுத்து இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    இதுவரை தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை மீறி சூடானில் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பதற்றம் நிறைந்த டார்மர் மாகாணத்தில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த மாகாணத்தில் ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஜெனனா நகர முக்கிய சந்தை கடுமையாக சேதம் அடைந்து உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் சண்டையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்து உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் போருக்கு மத்தியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ராணுவ படையினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. தர்பார் பகுதியில் கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரியும் போராட்டக்காரர்கள் கடைகள், மால்கள், மற்றும் வீடுகளை உடைத்து அங்கிருக்கும் பொருட்கள் மற்றும் நகை, பணத்தை சூறையாடி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
    • தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

    ராணுவ ஆட்சி நடந்து வரும் அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடும் சண்டை நடந்து வருகிறது.

    தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் சூடானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்தியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் சூடானில் சிக்கி தவிக்கிறார்கள். தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள். சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    ஆபரேசன் காவேரி என்ற பெயரில் மீட்கும் பணி தொடங்கப்பட்டு சூடானுக்கு கப்பலையும், சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இரண்டு விமானங்களையும் அனுப்பி உள்ளது. சூடானில் 72 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சூடானில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள், வாட்ஸ் அப் குருப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதில் தங்களது விவரங்கள், எந்த பகுதியில் இருக்கிறோம் என்ற தகவல்களை பகிர்ந்துள்ளனர். இதுவரை 84 தமிழர்கள் வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்பி உள்ளனர்.

    மின்சாரம் மற்றும் இணைய தள வசதி முடங்கி உள்ளதால் தகவல்களை பரிமாற்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முடங்கி போய் இருப்பதால் இந்திய மீட்பு கப்பல் நிறுத்தப்பட்டுள்ள போர்ட் சூடான் துறைமுகத்துக்கு இந்தியர்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அவர்களை துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கான வாகன வசதிகள் இல்லை.

    இதனால் தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து டைல்ஸ் நிறுவனத்துக்கு பணிக்கு சென்ற 28 பேர் தங்களை மீட்கும்படி வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் 17 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

    இதற்கிடையே போர்ட் சூடான் துறைமுகத்துக்கு 500 இந்தியர்கள் வந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    • ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
    • விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்கா நாடான சூடானில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்குள்ள ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அங்கு சண்டை ஓய்ந்தபாடில்லை.

    தலைநகர் கார்ட்டூம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வருவதாகவும் , குண்டு மழை பொழிந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தொடர் சண்டை நடந்து வருவதால் பொதுமக்கள் சூடானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    இந்த போரால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த சண்டைக்கு இதுவரை 413 பேர் இறந்து விட்டதாகவும், 3,551 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உலக சுகாதார மைய செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரீஸ் தெரிவித்து உள்ளார். மேலும் இதில் ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் 9 பேர் பலியாகி விட்டனர். 50 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர். மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் காயம் அடைந்தவர்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். தொடர் போரால் சாவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப் படுகிறது.

    சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரால் பொது மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சூடானில் தமிழர்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சவூதி அரேபியாவில் உள்ள செட்டாநகர் விமான நிலையத்தில் இந்திய விமான படையை சேர்ந்த 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இந்திய கப்பல் படையை சேர்ந்த ஐ.என்.எஸ். சுமேகா என்ற போர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சூடான் தனது வான் வெளியை மூடி உள்ளதால் உலக நாடுகள் தங்கள் நாட்டினரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது.

    • வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.
    • இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

    கார்டூம்:

    வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டு உள்ளது.

    சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதலில் அப்பாவி மக்கள் உள்பட 413 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சூடானில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்து உள்ளது.

    இதனால் அங்கிருந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே சூடானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்டு கொண்டு வர, ராணுவ துடுப்புகளை அனுப்ப அதிபர் ஜோபைடன் உத்தர விட்டார்.

    அதன்படி சூடானுக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.

    தலைநகர் கார்டூமில் இருந்து விமானம் மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ராணுவம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றது.

    சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

    அதேபோல் அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கார்டூமிலில் இருந்து தூதரக ஊழியர்களை விமானம் மூலம் வெளியேற்றும் அமரிக்க ராணுவம் சூடான் வான்வெளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியது என்றனர்.

    இதற்கிடையே சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பணி நிறைவடைந்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது உத்தரவின் பேரில் சூடானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றும் பணியை ராணுவம் மேற் கொண்டது.

    அப்பணியை ராணுவம் வெற்றிகரமாக முடித்து விட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்பணிக்கு உதவிய ஜிபூட்டி, எத்தியோப்பியா, சவூதி அரேபியாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    சூடானில் நடந்த இந்த துயரமான வன்முறை ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலி கொண்டு உள்ளது. இது மனசாட்சியற்றது. இச்சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    சூடானில் உள்ள அமெரிக்கர்களை ஒருங்கிணைந்து வெளியேற்றும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

    சூடானில் முக்கிய துறைமுகமாக போர்ட் சூடானில் இருந்து கப்பல் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், 91 வெளிநாட்டினர் என சுமார் 150 பேரை ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதில் சவூதி தூதரக அதிகாரிகள் விமான ஊழியர்கள், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, கனடா, வங்காளதேசம் பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புர்கினா பாசோ ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    அவர்கள் சவூதி அரேபியா ராணுவ அதிகாரிகளை பூங்கொத்து சாக்லேட் கொடுத்து வரவேற்றனர்.

    சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெங்சங்கர் சவூதி அரேபிய மந்திரியுடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள்.
    • இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள்.

    கர்த்தூம்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள்.

    ஆனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள். உம்துர்மன் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ளது.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

    அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • சூடானில் ஏற்பட்ட மோதல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்த மோதலில் 2,600 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கார்டோம்:

    ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.

    தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணை ராணுவ படை அறிவித்தது.

    இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 180 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. 2,600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • 1,800 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கார்டோம்:

    ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.

    தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை ராணுவ படை அறிவித்தது.

    இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை 185 பேர் உயிரிழந்ததாகவும், 1,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூடானில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    • ராணுவம் மற்றும் துணை ராணுவ தலைவர்கள் இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக மோதல் ஏற்பட்டுள்ளது.
    • ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான் மற்றும் துணை ராணுவ படையான விரைவு ஆதரவுப் படையின் தலைவர் ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

    தலைநகர் கர்த்தூமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தை பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிடுகின்றன. பிற பகுதிகளிலும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கிறது.

    சூடான் முழுவதும் ஆங்காங்கே மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு 97 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கர்த்தூமில் உள்ள விதிகளில் இன்னும் ஏராளமான உடல்கள் மீட்கப்படாமல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். அதேசமயம் சண்டையில் ஈடுபடும் படைவீரர்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தததன் அடிப்படையில், புர்ஹானும் டகலோவும் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்தனர். எனினும், துணை ராணுவம் எப்படி ஆயுதப் படைகளில் ஒருங்கிணைக்கப்படும்? ஒருங்கிணைத்தபின், மொத்த படைகளின் கட்டுப்பாடு யாரிடம் இருக்கும்? என்பது உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை. இதன் காரணமாகவும், இரண்டு தளபதிகளிடையே பிரச்சனை அதிகரித்ததாலும் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.

    ×