search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    குரலுக்கு பல கோடி ரசிகர்கள் - குவியும் வசூலில் உலக சாதனை
    X

    குரலுக்கு பல கோடி ரசிகர்கள் - குவியும் வசூலில் உலக சாதனை

    • வெவ்வேறு காலகட்டத்தை நினைவுகூரும் விதமாக எராஸ் டூர் நடத்தி வருகிறார்
    • "2023 ஆண்டிற்கான நபர்" என டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார்

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, 34 வயதான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift).

    தனது 14 வயதிலிருந்தே பாடல்கள் எழுத தொடங்கிய டேலர் பல ஆல்பங்களை வெளியிட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்.

    டேலர், 2024 டிசம்பர் வரை உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் ஒரு நீண்ட இசை சுற்றுலாவை 2023 மார்ச் மாதம் துவங்கினார்.

    எராஸ் டூர் (Eras Tour) என பெயரிட்டுள்ள இந்த சுற்று பயணத்தில் தனது வாழ்நாளில் இதுவரை அவர் கடந்து வந்த இசை பயணத்தின் வெவ்வேறு காலகட்டத்தை (eras) நினைவுகூரும் விதமாக 44 பாடல்கள் கொண்ட 10 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    ஸ்விஃப்டீஸ் (swifties) என அழைக்கப்படும் அவரது தீவிர ரசிகர்கள் அவர் செல்லும் நாடுகளுக்கெல்லாம் இடைவிடாது சென்று நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.

    ஓவ்வொரு இசை நிகழ்ச்சியையும் சுமார் 72 ஆயிரம் பேர் பார்க்க வருகின்றனர். கட்டணம் சுமார் ரூ.19 ஆயிரத்திற்கும் ($238) மேல் நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தயங்காமல் காண வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரூ.141 கோடிகளுக்கும் (17$ மில்லியன்) மேல் வசூல் குவிகிறது.

    கடந்த ஜூலை மாதம், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒவ்வொரு வருடமும் 8 முறை வெளியிடப்படும் பீஜ் புக் (Beige Book) எனப்படும் "சமகால பொருளாதார சூழல்" குறித்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஓட்டல் அறைகளின் முன்பதிவு எராஸ் டூர் நிகழ்ச்சியால் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் புகழ் பெற்ற "டைம்" (Time) பத்திரிகை, "2023 ஆண்டிற்கான நபர்" என டேலரை தேர்வு செய்து தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது.

    டேலர், இதுவரை வசூலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் 117 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது "எராஸ் டூர்" இசை நிகழ்ச்சி ரூ.8333 கோடிக்கு ($1 பில்லியன்) மேல் வசூல் செய்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. அவரது சுற்று பயணம் தொடர்வதால், இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிப்படுகிறது.

    இச்செய்தியால் டேலரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    Next Story
    ×