search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரான்சில் 7 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை- பிரதமர் மோடி அறிவிப்பு
    X

    பிரான்சில் 7 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை- பிரதமர் மோடி அறிவிப்பு

    • பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் படி பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

    தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். ஏராளமான இந்திய வம்சாவளியினரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பாரீசில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தை கேட்கும் போது நான் சொந்த மண்ணில் நிற்பது போல் உணர்கிறேன். நான் பல முறை பிரான்ஸ் வந்துள்ளேன். ஆனால் இந்த முறை எனது வருகை சிறப்பானது. இன்று பிரான்சின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இது இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

    இன்று உலகம் புதிய பாதையை நோக்கி நகர்கிறது. இதில் இந்தியாவின் பங்கும் கூட மிக வேகமாக மாறி வருகிறது. இந்தியா தற்போது ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுள்ளது. இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் பணி தொடங்கி இருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இருக்கிறோம்.

    பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும் உலகம் இந்தியாவையே உற்றுப்பார்க்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் நழுவ விட மாட்டோம். ஒவ்வொரு நேரத்தையும் வீணாக விட மாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது.

    எனது ஒவ்வொரு நொடியும் நமது நாட்டு மக்களுக்கானது என தீர்மானித்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான இடம் இருக்கிறது என்று சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியர்கள் இனி பிரான்சில் யு.பி.ஐ. பேமெண்ட் முறையை பயன்படுத்த இந்தியாவும், பிரான்சும் ஒப்புக்கொண்டு உள்ளன. இனி ஈபிள் கோபுரத்தில் இருந்து இந்திய சுற்றுலாப்பயணிகள் இந்திய ரூபாய்களில் கட்டணங்களை செலுத்த முடியும்.

    ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து மேலே கொண்டு வரப்பட்டு உள்ளனர் என கூறி இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஐரோப்பியாவின் மக்கள் தெகையை விட அதிகமாகும்.

    அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப்பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப்பெரிய பெருமை எனக்கு உண்டு.

    பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.

    100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்சின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததும் அங்கு இருந்து இந்திய வம்சாவளியினர் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

    பிரதமர் மோடி அறிவித்துள்ள திருவள்ளுவர் சிலையை புதுவையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் முனுசாமி வடிவமைத்து உள்ளார். இந்த சிலை வெண்கலத்தில் 7 அடி உயரத்தில் 600 கிலோ எடை யில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

    பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம், பிரான்ஸ் அரசு அனுமதியுடன் பாரீஸ் அருகே செர்ஜி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.

    பாரீசில் இன்று பிரமாண்ட தேசிய தினவிழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார், அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து அணி வகுப்பினை பார்வையிடுகின்றனர்.

    இந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளை சேர்ந்த 269 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களும் பிரான்ஸ் விமாப்படையுடன் இணைந்து சாகசங்களில் ஈடுபட உள்ளன. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலும் இந்த தேசிய தின விழா அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

    இந்த நிகழ்ந்சி முடிந்ததும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

    மேலும் பிரான்சிடம் இருந்து இந்திய கடற்படைக்காக 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மலே கான் கப்பல் கட்டும் தளத்தில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

    Next Story
    ×