search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தன்வினை தன்னை சுடுகிறது: பயங்கரவாதத்தை வேரறுப்போம் என்கிறார் பாக். ராணுவ அதிபர்
    X

    தன்வினை தன்னை சுடுகிறது: பயங்கரவாதத்தை வேரறுப்போம் என்கிறார் பாக். ராணுவ அதிபர்

    • இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 65 பேர் உயிரிழந்தனர்
    • இஸ்லாமுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தான் பிராந்தியத்தின் மஸ்டங் பகுதியில், நேற்று முன் தினம் நடைபெற்ற மிலாடி நபி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மதினா மஸ்ஜித் வழிபாட்டு தலத்தில் ஒரு பயங்கரவாத தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 60 பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    கைபர் பக்டுங்க்வா பகுதியில் உள்ள ஹங்கு எனும் இடத்தில் ஒரு காவல் நிலையம் அருகே உள்ள மசூதிக்கருகே மற்றொரு குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்; 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    தொடரும் தீவிரவாத தாக்குதல்களை கையாள முடியாமல் திணறுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் விமர்சிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல். சையத் அசிம் முனிர் இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    இஸ்லாமுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சிலர், பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் ஒரு சிலரின் துணையுடன், இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தான் எதிரிகளின் பிரதிநிதிகள். மன உறுதி மிக்க மக்களை கொண்ட ஒரு நாட்டின் பாதுகாப்பு படையின் முழு சீற்றத்தையும் இந்த தீயசக்திகள் இனிமேல்தான் காண தொடங்குவார்கள். ஓய்வு ஒழிச்சலின்றி இடைநிறுத்தம் இல்லாத ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

    இவ்வாறு முனிர் உறுதியளித்துள்ளார்.

    பாகிஸ்தான் முழுவதும் வன்முறை சம்பவங்கள் 57 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், இவ்வருட ஆரம்பம் முதல் சுமார் 386 பாதுகாப்பு படையினர் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    சுமார் 30 ஆண்டுகளாக தனது அண்டை நாடான இந்தியாவிற்கு பயங்கரவாதத்தை 'ஏற்றுமதி' செய்து வந்த நாடான பாகிஸ்தான், இப்போதுதான் தன் நாட்டிலேயே அதன் தீமையை உணர தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×