search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேரம் வந்துவிட்டது.. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்
    X

    "நேரம் வந்துவிட்டது".. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்

    • "முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்"
    • அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் உள்ளார்

    பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஹமாஸை முற்றிலுமாக துடைத்தெறிவதாக சூளுரைத்த இஸ்ரேல்,பாலஸ்தீனிய மக்கள் அதிகம் வாழும் காஸா மீது தாக்குதல் நடந்தி வந்த நிலையில் சமீபத்தில் ரஃபா நகரம் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

    கடந்த மே 26 ஆம் தேதி நடத்திய ரஃபா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்க்கிடையில் ஹமாஸிடம் இஸ்ரேலிய பிணைக்கைதிகளும், இஸ்ரேலிடம் பாலஸ்தீனிய பிணைக்கைதிகளும் அதிக அளவில் உள்ள நிலையில் தங்கள் நாட்டவரை விடுவித்தால் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள பலஸ்தீனியர்களை விடுவிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், இந்த போரில் ஆரம்பம் முதல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அனைத்து வகை உதவிகளையும் செய்து வரும் அமெரிக்கா சார்பில் போர் நிறுத்ததுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

    8 மாதங்களை கடந்து நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்று (மே 31) வெள்ளை மாளிகையில் செய்தி நேரலையில் பேசிய ஜோ பைடன், இஸ்ரேலின் இந்த உடன்படிக்கையை ஹாமாஸ் ஏற்று இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தற்போது வரை இஸ்ரேல் நடத்தியுள்ள வலுவான தாக்குதலில் ஹமாஸால் இனிமேல் பெரிய அளவில் செயல்பட முடியாது என்றும் தெரிவித்தார்.

    "இந்த தருணத்தை நேதன்யாகு விட்டுவிடக் கூடாது. 6 வார கால போர் நிறுத்தத்துக்கு ஏற்பட்டு ஹமாஸுடன் பேச்சுவார்த்தை வெற்றி பெரும் பட்சத்தில் அதை மேலும் நீட்டித்து போரை முடிவுக்கு கொண்டுவருவோம். அதன்பிறகு உலக நாடுகள் சேர்ந்து போரில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் ஈடுபவோம்" என்று பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×