என் மலர்
உலகம்
வடக்கு காசா மீது கடும் தாக்குதல்: ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஓட்டம்
- காசாவில் நடைபெற்று வரும் சண்டை, வெடிகுண்டு தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் ஓட்டம்.
- காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரை சுற்றி வளைத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் காசாவை வடக்கு, தெற்கு பகுதிகள் எனப் பிரித்தது. பின்னர் வடக்கு காசாவில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டது. தொடர்ந்து முன்னோக்கி சென்று வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்கள் வெடிப்பொருட்களை கைப்பற்றியதாக அறிவித்தது.
நேற்று காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்தது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நெருக்கிப்பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பயங்கர சண்டை நடைபெற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவை அடையும் வகையில் ஓட்டம் பிடித்துள்ளனர். பல மைல் தூரம் நடந்து சென்று தெற்கு காசாவை அடைந்து வருகிறார்கள்.
இதற்கிடையே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 10,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவர்களின் டாங்கிகள், வாகனங்களை அழித்தோம் என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜபாலியா நிவாரண முகாம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.