search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டுவீட்டெக் பயன்படுத்துகிறீர்களா?: எலான் மஸ்க் அடுத்த அதிரடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டுவீட்டெக் பயன்படுத்துகிறீர்களா?: எலான் மஸ்க் அடுத்த அதிரடி

    • வெரிஃபைடு பெற்றிருந்தால் மட்டுமே டுவீட்டெக்கை பயன்படுத்த முடியும்
    • ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என சில நாட்களுக்கு முன் அறிவிப்பு

    உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரான எலான் மஸ்க் நடத்தி வரும் சமூக வலைதள நிறுவனம் டுவிட்டர் (Twitter). இதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். பயனர்களுக்கு ஒரு தங்குதடையற்ற சேவை வழங்கும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தை லாபகரமாக நடத்தவும் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இதில் ஒன்றாக டுவிட்டர் வலைதளத்தில் உள்ள டுவீட்டெக் (TweetDeck) வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், இனி பயனர்கள் வெரிஃபைடு (Verified) அதாவது சரிபார்க்கப்பட்டவர்கள்- எனும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறை இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டுவீட்டெக் பழைய பதிவுகளை எளிதாக பார்ப்பது உட்பட பலவிதமான எளிதான படிக்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. தற்போது புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டுவீட்டெக்கை பயன்படுத்தி வெரிஃபைடு அவசியம் என்ற நிலையில், பயனர்களிடம் கட்டணம் வசூலிக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், டுவிட்டரின் உள்ளடக்கத்தை எளிதாக கண்காணிக்க டுவீட்டெக் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், இது டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து விளம்பர வருவாய்க்கு மிகவும் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    டுவிட்டரை வாங்கியதும் வெரிஃபைடு பெறுவதற்கு கட்டணம் வசூலித்தது. சரிபார்க்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என்று சில நாட்களுக்கு முன்புதான் டுவிட்டர் அறிவித்திருந்தது. இந்த நிலையில் டுவீட்டெக்கில் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

    Next Story
    ×