என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
புதிய மந்திரி சபையை அமைத்தார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
- மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார்.
- போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.
லண்டன்
இங்கிலாந்தின் பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் தனது மந்திரிசபையை அமைத்துள்ளார்.
கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை, நம்பிக்கையை மீட்டெடுப்பேன் என பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, அளித்த உறுதியை நிரூபிக்கிறவகையில் மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார். குறிப்பாக போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.
ரிஷி சுனக்கின் புதிய மந்திரிசபை விவரம் வருமாறு:-
* துணை பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் துணை பிரதமர் பதவி விகித்தவர் ஆவார்.
* ஜெரேமி ஹண்ட், நிதி மந்திரி பதவிக்கு வந்துள்ளார். இவர், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் நிதி மந்திரி குவாசி நீக்கப்பட்ட பின்னர் அந்த பதவிக்கு வந்தவர்.
* லிஸ் டிரஸ் மந்திரிசபையில் உள்துறை மந்திரி பதவி வகித்து, அதிமுக்கிய ஆவணம் ஒன்றை தனது தனிப்பட்ட இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகியவர் இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவர்மன் ஆவார். இவரை ரிஷிசுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியில் அமர்த்தி இருக்கிறார்.
* லிஸ் டிரஸ் மந்திரிசபையில் அங்கம் வகித்த ராணுவ மந்திரி பென் வாலஸ், வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி அப்படியே ரிஷி சுனக் மந்திரிசபையிலும் தொடருகிறார்கள். இவர்கள் போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்கள். அவர்களையும் ஒதுக்கிவிடவில்லை என்று ரிஷி சுனக் காட்டி உள்ளார்.
* லிஸ் டிரஸ் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் பதவி போட்டியில் தனக்கு எதிராக களத்தில் குதித்த பென்னி மார்டண்ட், தொடர்ந்து நாடாளுமன்ற மக்கள் சபை தலைவராக பதவி வகிப்பார் என ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
* வர்த்தக மந்திரியாக கிராண்ட் ஷாப்ஸ், பணிகள், ஓய்வூதியத்துறை மந்திரியாக மெல் ஸ்டிரைட், கல்வித்துறை மந்திரியாக கில்லியன் கீகன், சுகாதார மந்திரியாக ஸ்டீவ் பார்க்ளே, போக்குவரத்து மந்திரியாக மார்க் ஹார்பர், சர்வதேச வர்த்தக மந்திரியாக கெமி பெடனோக், கலாசார மந்திரியாக மிச்செல்லி டொனெலன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனது மந்திரிசபையில் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆதரவாளர்களுக்கும் ரிஷி சுனக் இடம் அளித்து இருப்பது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், "கட்சியின் திறமையானவர்களை இது ஒன்றிணைக்கிறது" என தெரிவிக்கின்றன.
முக்கிய ஆவணம் ஒன்றை தனது சொந்த இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய சூவெல்லா பிரேவர்மனுக்கு ரிஷி சுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விமர்சித்துள்ளது.
ஆனால் இதை வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி நியாயப்படுத்தி உள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் தனது தவறை ஒப்புக்கொண்டு விட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்" என தெரிவித்தார்.
மேலும், உள்துறை மந்திரி பதவியில் அவரது அனுபவத்தை பிரதமர் ரிஷி சுனக் மதிக்கிறார் எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் சூவெல்லா பிரேவர்மன் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தாராளவாத ஜனநாயக கட்சி (லிபரல் டெமாகிரட்ஸ்) வலியுறுத்தி உள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அலிஸ்டெயிர் கார்மிச்சேல் தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் நியமனம் குறித்து மந்திரிசபை அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு பதவி அளிப்பதாக மூடிய அறைக்குள் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார் என்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் என கூறி உள்ளது.
இந்த நிலையில் தனது மந்திரிசபையின் முதல் கூட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடத்தினார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்