search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    3 ஆண்டுகளாக நீடிக்கும் போர்: ரஷிய ராணுவ தொழிற்சாலை, எண்ணை கிடங்கு மீது உக்ரைன் கடும் தாக்குதல்
    X

    3 ஆண்டுகளாக நீடிக்கும் போர்: ரஷிய ராணுவ தொழிற்சாலை, எண்ணை கிடங்கு மீது உக்ரைன் கடும் தாக்குதல்

    • சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல்
    • ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    உக்ரைன் நாடு தனது பாதுகாப்புக்காக நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகள் மேற்கொண்டது. இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்று ரஷியா கருதியது. இதனால் உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா அதிரடியாக போர் தொடுத்தது.

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கணிசமான நகரங்களை ரஷியா தன் வசப்படுத்திக் கொண்டது. என்றாலும் உக்ரைன் நாட்டு ராணுவம் ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. அடிக்கடி இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றன.

    உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் இதுவரை சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக போர் நீடித்தபடி உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரஷியா நாடு மீது உக்ரைன் தனது தாக்குதல் வியூகங்களை மாற்றி உள்ளது. அதன்படி ரஷியாவின் பல ராணுவ நிலைகள் மீது உக்ரைன் நாடு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. சில டிரோன்கள் ரஷியாவின் உயரமான கட்டிடங்களை பதம் பார்த்தன.

    இதையடுத்து தனது பாதுகாப்பை உக்ரைன் பகுதியில் மேலும் பலப்படுத்திய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வந்தது. இந்தநிலையில் நேற்று ரஷியா மீது உக்ரைன் நாடு திடீர் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    ராணுவ தொழிற்சாலை

    ரஷியாவில் உள்ள சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் நூற்றுக்கணக்கில் சீறிப்பாய்ந்து தாக்கின. திடீரென உக்ரைன் ஏவுகணைகள் இத்தகைய பலமுனை தாக்குதலை நடத்தும் என்று ரஷியா எதிர்பார்க்கவில்லை.

    என்றாலும் சுதாரித்துக் கொண்ட ரஷிய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இந்த தாக்குதல்கள் நடந்தன.

    உக்ரைன் ஏவுகணைகள் ரஷியாவின் ராணுவ தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ராணுவ தொழிற்சாலை பீரங்கி, வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஆகும்.

    ஆனால் ராணுவ தொழிற்சாலைக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று ரஷியா கூறி உள்ளது.

    எண்ணை கிடங்கு

    அதுபோல ரஷியாவின் விமான எரிபொருள் சேமிப்பு நிலையமான எண்ணை கிடங்கு மீதும் உக்ரைன் குறி வைத்து ஏவுகணைகளை வீசியது. இதில் எண்ணை கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ஆனால் அந்த எண்ணை கிடங்கை நோக்கி வந்த ஏவுகணைகளை நடுவழியில் மறித்து அழித்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த எண்ணை கிடங்கு உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துக்கு முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.

    ரஷியாவின் குண்டு வீசும் போர் விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் முழுமையாக இந்த எண்ணை கிடங்கில் இருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய தாக்குதல்

    கடந்த சில மாதங்களில் ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக ரஷியாவின் சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

    இந்த தாக்குதல் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ரஷியா இன்று மீண்டும் அறிவித்தது.

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த போவதாகவும் ரஷியா கூறி உள்ளது. இதனால் ரஷியா- உக்ரைன் போரில் மீண்டும் பதட்டம் எழுந்துள்ளது.

    Next Story
    ×