search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம்: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது அமெரிக்கா
    X

    காசாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம்: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது அமெரிக்கா

    • பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன.
    • இங்கிலாந்து பங்கேற்காத நிலையில், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. குறிப்பாக கான் யூனிஸ் நகரை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 24 மணி நேரத்தில் நிலம், கடல், வான்வழியாக காசாவில் 450-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என்று தெரிவித்தது.

    காசாவில் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன. இங்கிலாந்து பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாசின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என்று தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிராகரித்தது.

    ராபர்ட் வுட்

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறும்போது, "நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியை தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்" எனத் தெரிவித்தார்.

    Next Story
    ×