search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவின்  துணை அதிபராகும் உஷாவின் கணவர்..  ஜே.டி. வான்ஸின் இந்திய வம்சாவளி மனைவியின் பின்னணி
    X

    அமெரிக்காவின் துணை அதிபராகும் உஷாவின் கணவர்.. ஜே.டி. வான்ஸின் இந்திய வம்சாவளி மனைவியின் பின்னணி

    • 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்
    • உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். வெற்றி உறுதியான பின்னர் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார்.

    அப்போது மேடையில் நின்றிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம் என்று பெருமிதமாக கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா கவனம் பெற்றார். கமலா ஹாரிஸ்க்கு எதிரான குடியரசுக் கட்சியின் நகர்வாக இது பார்க்கப்பட்டது.

    உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது. 1970களில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவுக்கு உஷாவின் குடும்பம் குடிபெயர்ந்தது. சான் டியகோவிலேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட வல்லுநராக பணியாற்றினார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜன்நாயக கட்சியில் இணைந்த உஷா ஒரு விவாத நிகழ்ச்சியின்போது ஜே.டி.வான்ஸ்- ஐ சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே அதே ஆண்டில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    தற்போது ஜேடி வான்ஸ் துணை அதிபர் ஆகியுள்ள நிலையில் உஷா அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்ற உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்நத ஒருவர் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாவது இதுவே முதல் முறை ஆகும்

    Next Story
    ×