search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டைட்டானிக் கப்பலை காணச் சென்ற 5 கோடீசுவரர்கள் கதி என்ன?
    X

    'டைட்டானிக்' கப்பலை காணச் சென்ற 5 கோடீசுவரர்கள் கதி என்ன?

    • கடல் சமிக்ஞைகளை கண்டுபிடிக்கும் மிதவைகளும் ஆங்காங்கே போடப்பட்டன.
    • 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.

    வாஷிங்டன் :

    கடந்த 1912-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரமாண்ட 'டைட்டானிக்' கப்பல், தனது முதல் பயணத்திலேயே சோகத்தை சந்தித்தது.

    வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதிய அந்தக் கப்பல், ஜல சமாதி ஆனது. அதில், கப்பலில் பயணித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கனடா நாட்டின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து 595 கி.மீ. தொலைவில், 13 ஆயிரம் அடி ஆழத்தில் அட்லாண்டிக்கின் மடியில் டைட்டானிக் கப்பலின் மிச்சங்கள் கிடக்கின்றன.

    'டைட்டானிக்' விபத்து நடந்து நூறாண்டுகள் கடந்த பின்பும் அதுகுறித்த அதீத ஆர்வம் உலக மக்களுக்கு உள்ளது. அதனால்தான், இந்த கப்பல் விபத்து அடிப்படையில் 1997-ல் வெளியான 'டைட்டானிக்' படம், உலகெங்கும் ஓடோ ஓடென்று ஓடி வசூலைக் குவித்தது.

    'டைட்டானிக்' மோகத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா வாஷிங்டனை சேர்ந்த 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம், டைட்டானிக் மிச்சங்களை காண்பதற்கான ஆழ்கடல் சுற்றுலாவை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது.

    அதற்காக வெறும் 22 அடி நீளமே உள்ள சிறிய நீர்மூழ்கி கலத்தை இந்த நிறுவனம் உருவாக்கியது. உறுதியான டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆன, 'டைட்டன்' என்ற இந்த நீர்மூழ்கியில், 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். டைட்டானிக் கப்பல் மிச்சங்கள் கிடக்கும் பகுதிக்கு ஒரு கப்பலில் அழைத்துச் செல்லப்படுபவர்கள், அங்கிருந்து 'டைட்டன்' நீர்மூழ்கியில் 'டைட்டானிக்' கப்பலை நோக்கி ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்வார்கள். டைட்டானிக்கை நெருங்கி, நீர்மூழ்கியின் காட்சி வழி மூலம் அதை பார்த்து ரசிப்பார்கள்.

    இந்த முறை நீர்மூழ்கியில் 5 கோடீசுவரர்கள் சென்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபரும், ஆழ்கடல் நீர்மூழ்கு சாகச வீரருமான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), பிரான்ஸ் நாட்டு கடற்படை முன்னாள் மாலுமியும், கடலியல் நிபுணருமான பால் ஹென்றி நர்கியோல் (77), 'டைட்டானிக்' ஆழ்கடல் சுற்றுலாவை நடத்தும் ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் (61), பாகிஸ்தானின் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஷசாதா தாவூத் (48), அவருடைய மகன் சுலைமான் தாவூத் (19).

    'போலார் பிரின்ஸ்' என்ற கப்பலில் இருந்து, 'டைட்டன்' நீர்மூழ்கி மூலம் இவர்கள் 5 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கடலுக்குள் இறக்கிவிடப்பட்டனர். மாலைக்குள் இவர்கள் மீண்டும் கப்பலுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் திட்டம்.

    ஆனால் நீர்மூழ்கி, ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய ஒன்றே முக்கால் மணி நேரத்தில், 'போலார் பிரின்ஸ்' கப்பலுடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

    அதைத் தொடர்ந்து பரபரப்பு பற்றிக் கொண்டது. அமெரிக்கா, கனடாவின் கடலோர காவல் படை கப்பல்கள், விமானங்களுடன், வணிக கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியை சூழ்ந்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கின. கடல் சமிக்ஞைகளை கண்டுபிடிக்கும் மிதவைகளும் ஆங்காங்கே போடப்பட்டன

    ஆனால் 'டைட்டன்' நீர்மூழ்கியில் இருந்து எந்த தகவலும் இல்லை. இது கடலுக்குள் இறங்கியபோது, 96 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் 'சப்ளை'யைத்தான் கொண்டிருந்தது. அது குறைந்துகொண்டே வரும் நிலையில், நேரத்துடன் போட்டி போட்டு நீர்மூழ்கியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் மீட்புப் படையினர் உள்ளனர். ஆனால், கடலுக்குள் சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில் தேடுதல், மீட்பில் ஈடுபடுவது என்பது எளிதான காரியம் அல்ல. அங்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட அழுத்தத்துடன், காரிருளும் சூழ்ந்திருக்கும்.

    இந்நிலையில் நேற்று ஒரு நல்ல செய்தியாக, கடலுக்கு அடியில் இருந்து சில சப்தங்களை தாங்கள் கண்டு பிடித்துள்ளதாக கனடா மீட்புப்படை விமானம் ஒன்று கூறியுள்ளது. அது, 'டைட்டன்' நீர்மூழ்கியில் இருந்துதான் வருகிறதா என உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் மீட்பு முயற்சியில் இது லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றிக்கொண்டு, அமெரிக்கா, கனடா மீட்புப் படையினர், தேடுதலில் மும்முரமாகியுள்ளனர்.

    இந்நிலையில், குறிப்பிட்ட 'ஓசன்கேட்' நிறுவனம், போதுமான பாதுகாப்பு பரிசோதனைகளை செய்யாததுதான் விபத்துக்கு காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடல் நடவடிக்கைகளுக்கான இயக்குனராக பணிபுரிந்த டேவிட் லோக்ரிட்ஜ், திருப்திகரமான வெள்ளோட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளாமல், அதிக அழுத்தம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு ஆட்களை அழைத்துச் செல்வது ஆபத்தாக முடியலாம் என்று கடந்த 2018-ம் ஆண்டே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

    இனிமேல், இதுபோன்ற ஆழ்கடல் பயண பாதுகாப்பில் குறிப்பிட்ட நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும், அமெரிக்க அரசும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது நிச்சயம்.

    ஆனால் இப்போதைக்கு, 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.

    Next Story
    ×