என் மலர்
உலகம்
வெள்ளை மாளிகை தாக்குதல்: இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை.. நாஜி சர்வாதிகார நாசவேலை
- சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
- அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மே 22, 2023 அன்று வாடகை டிரக்கை மூலம் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா [20 வயது] முயற்சி செய்தார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அரசை கவிழ்த்து ஹிட்லரின் நாஜி சர்வாதிகாரத்தை நிறுவுவதே அவரின் நோக்கமாக இருந்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, சட்டப்பூர்வ அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை பெற்ற சாய், தெலுங்கானாவின் சந்தாநகரைச் சேர்ந்தவர். சம்பவத்தன்று மிசோரி நகரின் செயின்ட் லூயிஸில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு வணிக விமானத்தில் பயணித்து, மாலை 5:20 மணிக்கு டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சாய், மாலை 6:30 மணிக்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்தார்.
இரவு 9:35 மணிக்கு, ஹெச் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றிய தடுப்புகளில் சாய் அந்த டிரக்கை மோதியுள்ளார்.
டிரக் இரண்டு முறை உலோகத் தடுப்புகள் மீது மோதியதால், புகைபிடித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, சாய், வாகனத்தை விட்டு வெளியேறி, தனது பையில் இருந்து நாஜி ஸ்வஸ்திகா கொடியை வெளியில் எடுத்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் காட்டியுள்ளார். அங்கு விரைந்த போலீஸ் அவரை கைது செய்தது.
சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
நாஜி சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ, தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார் என்றும் மே 22 சம்பவத்திற்கு பல வாரங்களுக்கு முன்னதாகவே சாய் இந்தத் தாக்குதலை திட்டமிட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சாய், விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எனவே சாய்க்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி Dabney L. Friedrich 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தற்போது தீர்ப்பளித்துள்ளார்.