search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மீண்டும் தேர்வு- 3வது முறையாக சீன அதிபரானார் ஜின்பிங்
    X

    ஜின்பிங்

    மீண்டும் தேர்வு- 3வது முறையாக சீன அதிபரானார் ஜின்பிங்

    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.
    • அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.

    இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. இதில் 3-வது முறையாக அதிபராக நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜின்பிங் தீவிரமாக செயல்பட்டார்.

    ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் அதிபர் ஜின்பிங் பேசியபோது, தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும் எதிர்க்கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற சீன ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சி செயல்பாடு, அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.

    மாநாட்டில் 205 உறுப்பினர்களை கொண்ட புதிய மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழு இன்று காலை கூடி கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்தது.

    ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    7 பேர் கொண்ட கட்சியின் உயர்மட்ட புதிய பொலிட்பீரோ நிலைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழுவுக்கு ஜின்பிங் தலைமை தாங்குகிறார்.

    கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜின்பிங் உரையாற்றினார். அவர் கூறும்போது, "நமது பலத்தை ஒன்றாக இருந்து ஒற்றுமையுடன் முன்னேறுவோம் என்றார்.

    சீனாவில் ஒருவர் 2 முறை மட்டும்தான் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறையை 2018-ம் ஆண்டு அதிபர் ஜின்பிங் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    நேற்றைய கூட்டத்தில் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவ், திடீரென்று எழுந்து அதிபர் ஜின்பிங் அருகே சென்றார். உடனே ஹு ஜிண்டாங்கை அதிகாரிகள் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சி விளக்கம் அளித்தது. அதில் ஹு ஜிண்டாங் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

    Heading

    Content Area

    Next Story
    ×