search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பதிவு செய்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை
    X

    கோப்பு படம்.

    விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பதிவு செய்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • ஒவ்வொரு வீட்டு மனையையும் பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம், புதுவையில் கடந்த 2001-ம் ஆண்டு விவசாய நிலங்களை மனைகளாக்குவதை தடுக்க ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதன்படி அரசின் அனுமதி யில்லாமல் விவசாய நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடியாது.

    ஆனால் புதுவையில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக விவசாய நிலங்கள் தொடர்ந்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அரசின் நகரமைப்பு குழுமம், பெரா ஆகியவற்றின் அனுமதியும் பெறப்படுவதில்லை. ஒவ்வொரு வீட்டு மனையையும் பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.

    ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பதிவு செய்கின்றனர். இந்த லஞ்சம் அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை பிரித்து கொடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு பல முறை எடுத்துச்சென்றுள்ளோம்.

    நேற்றைய தினம் பாகூரை சேர்ந்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் ஓய்வுபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியுள்ளனர்.

    வில்லியனூரில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ. விசாரணை கோரி அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுத உள்ளோம்.

    வில்லியனூரில் சதுர அடி நிலம் மார்க்கெட்டில் ரூ.2 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் அரசு மதிப்பீடு ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு மதிப்பை மார்க்கெட் விலைக்கு நிகராக உயர்த்துகின்றனர். புதுவையில் பல ஆண்டாக அரசு மதிப்பை உயர்த்தவில்லை. நிலத்தின் மதிப்பையும் அரசு உயர்த்த வேண்டும். அனுமதியின்றி விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்த அனைத்து அதிகாரிகள் மீதும், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றுள்ளதா? என கேட்ட போது,

    அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், முடிவும், அறிவிப்புமே எங்கள் வேதவாக்கு என்று கூறினார்.

    Next Story
    ×