search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
    X

    தீக்குளிக்க முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

    • புதுவை சட்டசபை வளாகத்தில் நடந்தது.
    • காரிலிருந்து ரங்கசாமி இறங்கி நின்று, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். இதைக்கண்ட தவமணி ஓடிச்சென்று முதல்-அமைச்சரின் காலை பிடித்துக்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கோர்க்காடை சேர்ந்த பெண் தவமணி(46).இவர் தனது அண்ணன் மாசிலாமணி மற்றும் குடும்பத்தினருடன் புதுவை சட்டசபைக்கு இன்று காலை வந்திருந்தார்.

    முதல்-அமைச்சரை காண வேண்டும் எனக்கூறி சட்டசபை வளாகத்திற்குள் வந்து காத்திருந்தார். அப்போது சுமார் 12.15 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்துக்கு காரில் வந்தார். அவரை வரவேற்க அலுவலக ஊழியர்கள் காத்திருந்தனர்.

    அப்போது காரிலிருந்து ரங்கசாமி இறங்கி நின்று, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். இதைக்கண்ட தவமணி ஓடிச்சென்று முதல்-அமைச்சரின் காலை பிடித்துக்கொண்டார்.

    தனது பிரச்சினைக்கு முதலமைச்சர்தான் தீர்வு காண வேண்டும். கோர்க்காட்டில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நெல் பயிர் செய்திருந்தோம். தற்போது வக்கீல் ஒருவர் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துகொண்டார். நெல்லையும் அறுவடை செய்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கதறியழுதார்.

    அப்போது அருகிலிருந்த தவமணியின் அண்ணன் மாசிலாமணி மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். அப்போது பெட்ரோல் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் காலிலும் ஊற்றியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சரின் பாதுகாவலர்கள், சட்டசபை காவலர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் இருந்து அகற்றினர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கூறிவிட்டு அலுவலகத்துக்குள் சென்றார். இதையடுத்து சட்டசபை காவலர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெரியகடை போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, பின்னர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து வில்லியனூர் எஸ்பியிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அவர்களை போலீஸ் வாகனத்தில் வில்லியனூருக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுவை சட்டசபையில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வது வாடிக்கை. இருப்பினும் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துவரும் வரை சட்டசபை காவலர்கள் அஜாக்கிரதையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துறைரீதியில் விசாரணை நடத்தவும் சட்டசபை செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவத்தால் புதுவை சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. பெட்ரோல் துளிகள் பட்டதால் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் சட்டையை மாற்றிக்கொண்டார்.

    Next Story
    ×