என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள்
    X

    கோப்பு படம்.

    கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள்

    • தமிழிசைக்கு நாராயணசாமி கண்டனம்
    • கவர்னர் வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

    புதுச்சேரி:

    புதுவை ஜெயராம் ஓட்டலில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித்தலைவர் சிவா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், திராவிடர் கழகம் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், கவர்னர் தமிழிசையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: -

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, தேவையான நிதியை கொடுத்து ஜிப்மரை சிறப்பாக நடத்தி வந்தோம். தற்போது ஜிப்மர் தரம் குறைந்துள்ளது. தகுதியான மருத்துவர்கள் இல்லை.

    நோயாளிகளை கவனிப்பதற்கு தேவையான மருத்துவர்கள் இல்லை. யார் சிகிச்சைக்கு சென்றா லும், குடும்ப அட்டையை காண்பியுங்கள் என்று கேட்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படு வதாலும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கொடுக்காததாலும், இதனை கண்டித்து நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் மக்கள் பிரச்னையை பற்றி திருமா வளவன், ரவிக்குமார் ஆகி யோர் பேசினர்.

    ஆனால், கவர்னர் தமிழிசையோ ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார். ஜிப்மர் நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. எல்லா மருத்துவ உபகரணங்களும் உள்ளது. பெங்களூருக்கு இணையாக மருத்துவம் கொடுக்கப்படுகிறது.

    ஏழை நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை. ஆனால், விமர்சனம் செய்கிறார்கள். விழுப்புரம் எம்.பிக்கு புதுவையில் என்ன வேலை என்று பேசியுள்ளார்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான நிதி பாராளுமன்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு விழுப்புரம் எம்.பியும் கையெழுத்து போட்டுள்ளார்.

    மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்பிக்களுக்கும் உண்டு. விவரம் தெரியாமல் கவர்னர் பேசியது வேதனை தருகிறது. ஒரு எம்.பியை தரம் தாழ்ந்து பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் வேலை. அப்படி சுட்டிக்காட்டும் போது, தவறை சரி செய்ய வேண்டும்.

    இதற்கு ஜிப்மர் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். கவர்னர் வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தை பற்றி எம்.பி பேசுவதை கவர்னர் கொச்சைப்படுத்தி பேசுகிறார். கவர்னர் அனைத்திலும் மூக்கை நுழைக்கிறார்.

    கவர்னர் தமிழிசை புதுவை மாநில பா.ஜனதா செயலாளராக செயல்படுகிறார். ஜிப்மரை பற்றி பேசுவதற்கு எங்களுக்கும் விழுப்புரம் எம்.பிக்கும் உரிமை உண்டு. தேவையில்லாத கருத்துகளை கூற கூடாது. வெளியில் பேச வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேட்டி கொடுங்கள். ஜிப்மர் நிர்வாகம், கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×