என் மலர்
Recap 2024
2024 ரீவைண்ட்: தளபதி To தலைவர் - விஜயின் அரசியல் பிரவேசம்
- தவெக-வின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார்.
- மாநாட்டில், திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று விஜய் கூறினார்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது வரிசையில் நடிகர் விஜயும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கினார். கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என தெரிவித்த அவர், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அறிவித்தார்.
அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆக.22-ந்தேதி தவெக-வின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அவர் ஏற்றினார்.
கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும், கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை இருந்தது.
இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சிக்கொடி அறிமுகத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ முதல் அரசியல் மாநாடானது விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த அக். 27-ந்தேதி நடந்தது.
மாநாட்டில் பேசிய விஜய், 'பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்' என்று தெரிவித்தார்.
அரசியல் தலையீடு, ஊழல் அற்ற நிர்வாகம், எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது குறிக்கோள் என்று தமிழக வெற்றிக் கழக கொள்கை வெளியிடப்பட்டது.
மாநாட்டில், திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று விஜய் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கொடி தோன்றிய வரலாறு குறித்து மாநாட்டில் விளக்க வீடியோ ஒளிபரப்பட்டது.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. தவெக மாநாடு ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் திரும்பி பார்க்க வைத்த மாநாடாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.