search icon
என் மலர்tooltip icon

    Recap 2024

    2024 ரீவைண்ட்: பட்டினி முதல் பயங்கரவாதம் வரை.. உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் இடம் - மீள்பார்வை
    X

    2024 ரீவைண்ட்: பட்டினி முதல் பயங்கரவாதம் வரை.. உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் இடம் - மீள்பார்வை

    • உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இல் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது.
    • உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது.

    உலகளாவிய குறியீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் குறித்த அளவீடுகளாக உள்ளது. அந்த வகையில் 2023-2024 ஆம் ஆண்டின் உலகளாவிய குறீயீடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம் வருங்காலங்களுக்கான படிப்பினையை வழங்குவதாக அமைந்துள்ளது.

    பொருளாதார வளர்ச்சி, கண்டுபிடிப்பு, மனித மேம்பாடு, பருவநிலை மாற்றத்தை கையாள்வது உள்ளிட்டவற்றில் வளர்ச்சி இருந்தபோதிலும் அமைதி, ஊழல், பாலின சமத்துவமின்மை மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றில் இந்த வருடம் இந்தியா பெற்றுள்ள இடம் கவலை அளிப்பதாக உள்ளது.

    ஐநா மனித வளர்ச்சிக் குறியீடு

    ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின்படி, 2023-2024க்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. மனித வளர்ச்சிக் குறியீடு, ஆரோக்கியம், அறிவு மற்றும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் நாடுகளை அளவிடுகிறது. சில பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

    காலநிலை மாற்றம் செயல்திறன் குறியீடு

    இந்த வருடம் வெளியான ஜெர்மன்வாட்ச் அமைப்பின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023 இன் படி இந்தியா 7வது இடத்தில் உள்ளது. பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் பயன்பாடு மற்றும் காலநிலை கொள்கை உள்ளிட்ட நான்கு அளவுகோல்கள்படி இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக கவனம் அளிக்கப்படுவதால் இந்தியாவில் இந்த முன்னேற்றமானது நிகழ்ந்துள்ளது.

    உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு

    2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இந்தியா 14வது இடத்தில் உள்ளது. 163 நாடுகளில் நடந்த சம்பவங்கள், இறப்புகள், காயங்கள் மற்றும் பணயக்கைதிகள் ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது. இதில் இந்தியா பெற்றுள்ள இடம் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுத்தி வரும் சவால்களை சுட்டிக்காட்டுகிறது.

    சர்வதேச ஐபி குறியீடு

    நாடுகளில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை அளவிடும். அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்த வருடம் வெளியிட்டுள்ள சர்வதேச ஐபி குறியீடு 2024 இல் இந்தியா பின்னடைவோ முன்னேற்றமோ இல்லாமல் அதே 42வது இடத்தில் உள்ளது.

    குளோபல் Soft power குறியீடு

    இராஜதந்திர, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளில் நாடுகளின் நிலை குறித்து அளவிடும் குளோபல் Soft power 2024 குறியீட்டில் 29 இடத்தை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக 28 வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் 1 இடம் பின்தங்கியுள்ளது.

    ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு

    பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2024 இல் இந்தியா 84 வது இடத்தில் உள்ளது.

    பாலின சமத்துவமின்மை குறியீடு

    இந்த வருடம் வெளியான UNDP இன் பாலின சமத்துவமின்மை குறியீடு 2022 இல் இந்தியா 129வது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீடு பெண்களின், இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் சந்தைகளில் பாலின சமத்துவமின்மையை வைத்து அளவிடுகிறது. பெண்களின் உரிமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியா இன்னும் குறிப்பிடத்தக்கப் பாலின வேறுபாடுகளை எதிர்கொள்கிறது.

    உலக மகிழ்ச்சி அறிக்கை

    ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (SDSN) வெளியிட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இல் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது. இது இந்திய குடிமக்கள் மத்தியில் மிதமான மகிழ்ச்சி நிலைகளைக் குறிக்கிறது. வாழ்க்கைத் தரம், சமூக ஆதரவு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை கொண்டு இந்த குறியீடு அளவிடப்படுகிறது.'

    உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு

    உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்ட உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2024 இல் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியா தொழில்நுட்ப விண்வெளி மற்றும் ஆராய்ச்சி பகுதிகளில் வளர்ந்துள்ளதை இது காட்டுகிறது. கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழலில் வளர்ச்சியடையாமல் உள்ளது.

    உலகளாவிய பட்டினி குறியீடு

    2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் போதுமான ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் சவால்களைக் கொண்டுள்ளதையே இந்த இடம் குறிக்கிறது.

    உலகளாவிய போட்டித்திறன் குறியீடு

    உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது.நீண்ட கால மதிப்பை உருவாக்குவதற்கு நாடுகள் தங்கள் திறன்களை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதை இந்த குறியீடு அளவிடுகிறது.

    உலகளாவிய அமைதிக் குறியீடு

    சமூகப் பாதுகாப்பு, மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் மூலம் ஒரு நாட்டில் அமைதியின் அளவை மதிப்பிடும் உலகளாவிய அமைதிக் குறியீடு 2024 இல் இந்தியா 116வது இடத்தில் உள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் அமைதியை உறுதிப்படுத்த இந்தியா தவறியதை இந்த இடம் குறிக்கிறது.

    எதிர்கால வாய்ப்புகள் குறியீட்டு

    உலகளாவிய மாற்றங்களுக்கு நாடுகள் எவ்வாறு தங்களை மேம்படுத்தி மாற்றியமைக்கின்றன என்பதைக் கொண்டு அளவிடப்படும் எதிர்கால வாய்ப்புகள் குறியீட்டு 2024 இல் இந்தியா 35 வது இடத்தில் உள்ளது

    ஊழல் தடுப்பு குறியீடு

    டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் 2023 இன் ஊழல் புலனாய்வு குறியீட்டில் இந்தியா 93 வது இடத்தில் உள்ளது. ஊழலுக்கு எதிரான அரசு நடவடிக்கையின் போதாமையை இவ்விடம் பிரதிபலிக்கிறது.

    உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு

    2024ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில், இந்தியா 159வது இடத்தில் உள்ளது, இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தில் மிகுந்த கவலைக்குரிய இடத்தில் இந்தியா உள்ளதை குறிக்கிறது.

    Next Story
    ×