என் மலர்
Recap 2024
2024 ரீவைண்ட்: 26.5 சதவீதம் வளர்ச்சி.. விற்பனையில் மாஸ் காட்டிய எலெக்ட்ரிக் வாகனங்கள்
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
- 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள்.
உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும் போது, வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் எலெக்ட்ரிக், டாடா பன்ச் எலெக்ட்ரிக், மஹிந்திரா நிறுவனத்தின் BE 6E, XEV 9e, எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் வின்ட்சர், கியா நிறுவனத்தின் EV9 உள்பட பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யபபட்டுள்ளன. இவைதவிர ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்து 1.94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதனை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1.5 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது, நாட்டின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை 7.46 சதவீதமாக உயர்த்தியது. இது 2023 ஆம் ஆண்டு 6.39 சதவீதமாக இருந்தது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் போதிலும், பெட்ரோல் வாகனங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த ஆண்டு விற்பனையான ஒட்டுமொத்த (26.04 மில்லியன்) வாகனஹ்களில் 73.69 சதவீதம் (19.18 மில்லியன்) யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும்.
இதில் 10.5 சதவீதம் (2.62 மில்லியன்) யூனிட்கள் டீசல் மாடல்கள், 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள் ஆகும். 2024 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனத்திற்கு இணையாக 12.43 பெட்ரோல்-சி.என்.ஜி, ஹைப்ரிட், டீசல் மாடல்கள் அடங்கும்.
மாதாந்திர விற்பனை:
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முறையே 1,45,064 மற்றும் 1,41,740 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மார்ச் மாதத்தில் 2,13,068 யூனிட்களாக அதிகரித்தது. பிறகு ஏப்ரல், மே மாதங்களில் குறைந்து 1,15,898 மற்றும் 1,40,659 யூனிட்களாக இருந்தது. ஜூன் மாதத்தில் 1,40,137 யூனிட்கள் விற்பனையானது.
2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையானது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2,19,482 யூனிட்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிக வாகனங்கள் விற்பனையா மாதமாக அமைந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,92,575 மற்றும் 1,32,302 யூனிட்களாக சரிந்தது.
எனினும், இந்த ஆண்டு முழுக்க ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறைந்தபட்சம் ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாகவே இருந்துள்ளது.
மத்திய அரசு திட்டம்:
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்து ஃபேம் 2 திட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1,15,898 யூனிட்களாக சரிந்தது.
இதன் பிறகு, பண்டிகை காலம் மற்றும் பிரதமரின் இ-டிரைவ் திட்டம் காரணமாக மீண்டும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் சமீப காலங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய மாடல்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.