search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 Percent EWS Reservation"

    • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது.
    • சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து ஆராய 2006-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியிலான மத்திய அரசு.

    அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-தி.மு.க. மத்திய கூட்டணி அரசு. அப்போது, திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.

    இந்த சட்டத்தைத்தான் தற்போதைய பா.ஜனதா அரசு 2019-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

    தி.மு.க. தலைமை, தற்போது பா.ஜனதா தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது.

    இன்றைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தி.மு.க.வின் தயவால் அங்கு இடம்பெற்றவை. அவைகளில், இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான, இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டை மனமுவந்து வரவேற்பதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிசன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சினை வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.

    மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் இதை சேர்த்து அதை உறுதிப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார்.

    ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்ட மன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘சமூக நீதி’ என்பது அனைவருக்கும் ‘சம நீதி’யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.
    • தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது.

    கோவை:

    பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே வேளையில் சில மாநில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    10 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பா.ஜ.க.வின் சமநீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (இடபிள்யு எஸ்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 103-வது திருத்தம் செல்லும் என்று, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது பொது பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக அமைந்துள்ளது.

    இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தமிழக மண்ணில் இருந்து, சமூக நீதிக்கான குரலை, நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதுவரை இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத, பொதுப்பட்டியலில் உள்ள ஏழைகள், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாமலும், அரசு வேலைவாய்ப்புகளை பெற முடியாமலும் இருந்தனர்.

    இந்த சமூக அநீதியை சரி செய்யவே, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.

    'சமூக நீதி' என்பது அனைவருக்கும் 'சம நீதி'யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. ஆனால், தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து, அதன் மூலம் அரசியல் நடத்தி வரும் கட்சிதான் தி.மு.க.

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மட்டும் பயன்பெறவில்லை. அப்படியொரு பிரசாரத்தை தி.மு.க. செய்து வருகிறது. தமிழகத்தில் பிராமணர்கள் மட்டுமல்லாது, வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட 60-க்கும் அதிகமான சமூகத்தினர், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் வருகின்றனர். தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இந்த சமூகத்தினரையும் பலி கொடுக்க தி.மு.க. தயாராகிவிட்டது.

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டை, உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று அதனை எதிர்க்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் திரும்ப திரும்ப கூறி வருகின்றன. சட்டத்தில் எங்கும் உயர் ஜாதி ஏழைகள் என்று குறிப்பிடப்படவில்லை.

    இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத சமூகங்களை, உயர் ஜாதி என்று சட்டம் அழைக்கவில்லை. பொதுப்பட்டியலுக்குள் வைத்துள்ளது. உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று எதுவும் கிடையாது. சட்டத்தில் இல்லாத ஒன்றை திரும்பத் திரும்ப கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.

    அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. அதனால் தான் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்த சிக்கல்கள் பலவற்றுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தீர்வு கண்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்' என்பதுதான் பா.ஜ.க. அரசின் கொள்கை.

    10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மீது இரு அவைகளிலும் விவாதத்திற்கு வந்தபோது, அதனை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரித்தன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அப்படியெனில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை.

    10 சதவீத இட ஒதுக்கீடு பற்றி தவறாக பிரசாரம் செய்யாமல், காலங்காலமாக, இட ஒதுக்கீடு கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிய சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
    • ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு, வில்சன் எம்.பி., தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு, வில்சன் எம்.பி., தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.
    • பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:-

    ஜன-8, 2019: அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஜன-9: மேல்சபையில் 103-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஜன-12: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக சட்ட அமைச்சகம் அறிவித்தது.

    பிப்: இந்த புதிய சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    பிப்-6: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    பிப்-8: 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது.

    செப்-8, 2022: மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.

    செப்-13: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

    நவ-7: பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    ×