search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 pounds jewelery stolen"

    • கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு இந்திரா நகரில் வட இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயின் மந்திர் என்ற கோவிலை அப்பகுதியில் கட்டி வழிபட்டு வந்தனர்.

    சுப்தேவ்(45) என்பவர் இந்தக் கோவிலின் பூசாரியாக உள்ளார். தினமும் அதிகாலை கோவிலைத் திறந்து பூஜைகள் செய்து இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    நேற்று இரவு 8 மணி அளவில் பூஜைகள் முடிந்து சுப்தேவ் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக சுத்தேவ் வந்தார். கோவில் நுழைவாயில் கதவை திறந்து கோவில் வளாகத்திற்குள் சென்றார்.

    அங்கு கருவறையில் உள்ள கதவை திறக்க சென்றபோது ஏற்கனவே கதவு கடப்பாறை கம்பியால் உடைத்து திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே பீரோல் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உண்டியலில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மூலவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையும் திருட்டுப் போயிருந்தது.

    இது குறித்து சுப்தேவ் ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த ஜெயின் கோயிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஜெயின் கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது நள்ளிரவில் கோவில் வளாகத்திற்குள் 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைவதும் அவர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வதும் நகைகளை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஜெர்ரி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இரும்பு உண்டியலை அவர்கள் திறக்க முடியாததால் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகரை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×