search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi month specials"

    • ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள்.
    • ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதம், விதமாக அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஏனெனில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள். இதனால் தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காக பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா 'முளைக்கொட்டு விழா' என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு 'ஆடி வீதி' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளைகாப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் அன்று தீமிதி வைபவமும் நடைபெறும்.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஆலயத்தில் அம்பிகைக்கு 'பூரம் கழித்தல்' எனப்படும் ருது நீராடல் வைபவமும், வளைகாப்பும் சிறப்பாக நடைபெறும்.

    இதே போல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள்.

    நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன், தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள். இங்கு ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்குப் பூரம் கழித்தல் எனப்படும் ருது நீராடல் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது ஒன்பது கன்னிப்பெண்களை வரிசையாக உட்காரவைத்து நலங்கு வைத்து வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ் மற்றும் ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குவார்கள்.

    திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அன்னை குங்குமவல்லி அம்மனுக்குத் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வளையல் சாற்று வைபவம் நடத்தப்படும்.

    என்றாலும் ஆடிப்பூரத்தன்று சுமங்கலிகளும், கன்னிப்பெண்களும், குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டும் கர்ப்பிணிப்பெண்களும் அம்மனுக்கு வளையல்களை அர்ச்சனையின் போது பூஜைத்தட்டில் சமர்ப்பித்து, அர்ச்சித்து, அதனைப்பிரசாதமாகப் பெற்று தங்கள் கைகளில் அணிந்து கொள்வார்கள்.

    சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி திருவனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் பெருவிழாவாக இன்று சிறப்பாக கொண்டாடப்படும்.

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.

    ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம்.

    அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே.

    சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார்.

    பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம்.

    சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.

    அன்றிரவு, அந்த வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன்.

    பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்." என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

    இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள்.

    வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

    அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.

    இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம்.

    அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைகூடும்.

    • ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.
    • பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவில் சனி பரிகார தலமாக உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு செல்லும் சுரபி நதிக்கரையில் பக்தர்கள் நீராடி எள்சாதம், நெய் தீபம் ஏற்றி கருப்பு வேட்டி, பூமாலை, பழம், படையல் செய்து வழிபாடு நடத்தினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.


    இந்த திருவிழாவின் போது சனீஸ்வரர் திருக்கல்யாணம், துணை சன்னதியான கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தல், மதுபான படையல், ஆடு, கோழிகளை பலியிட்டு விருந்து வைத்தல் ஆகிய வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    நடப்பாண்டில் குச்சனூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.1 கோடியில் துணை சன்னதிகளான விநாயகர், முருகன், கருப்பணசாமி, பலிபீடம், கொடி மரம் உள்ளிட்ட 14 இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, பகல், இரவு ஆகிய 3 கால பூஜைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம்.
    • ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

    * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    * ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    * ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    * ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    * ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    * பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    * ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ×