search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akal lamp"

    • தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.
    • பனி மூட்டமாக இருப்பதாலும் அகல்விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இதுபோல் கோவில்களிலும், பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவர். அகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும்.

    இது பொதுவாக களி மண்ணால் செய்யப்பட்டு, பருத்தி திரியால், நெய் அல்லது நல்லெண்ணை கொண்டு எரியூட்டப்படும். விளக்கேற்றுவ தால் துன்ப இருள் அகற்றப்பட்டு மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

    இப்படி சிறப்பு வாய்ந்த தீபத்திரு விழாவையொட்டி, தமிழகத்தில் பல்வேறு இடங் களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

    தஞ்சை கீழவாசல் பழைய மாரியம்மன்கோவில் சாலை சாலக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடா் மழை இருந்து வந்த நிலையில், தற்காலிகமாக அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தனா். தற்போது மழை ஓய்ந்ததால் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரம் காட்டி வருகின்றனா்.

    ஒரு முகவிளக்கு, 5 முக விளக்கு என பல அளவுகளில் அகல் விளக்கை வடிவமைக்கிறார்கள். அதன்பின்னர் தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.

    இப்பகுதியில் தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் தஞ்சை மட்டுமின்றி பிற ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது மழை பெய்து ஓய்ந்தாலும் அவ்வப்போது மேகமூட்டம் திரள்வதாலும், பனி மூட்டமாக இருப்பதாலும் அகல்விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அகல்விளக்குகளை தீயில் சுடுவதற்கு தேவையான வைக்கோல், தென்னை மட்டை, கீற்றுகளும் மழையில் நனைந்ததை காய வைக்க முடியவில்லை.

    இதனால் 7 நாட்களில் முடிய வேண்டிய பணி கூடுதல் நாட்கள் ஆகிறது.

    இது குறித்து அகல்விளக்கு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுமபோது,

    கார்த்திகை தீபத்திரு விழாவிற்கான அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மழைக்கால மாக இருப்பதால், மண்ணை பதப்படுத்தி, விளக்குகள் தயாரிப்பதில் சிக்கல் உள்ளது.

    பனிப்பொழிவு காரணமாக விளக்குகளை காய வைக்க முடியாத நிலை உள்ளது. ஒருமுகம் கொண்ட 3 விளக்குகள் ரூ.10-க்கும், 5 முக விளக்கு ஒன்று ரூ.70-க்கும், 7 முக விளக்கு ஒன்று ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி எங்களுக்கு வேலை இருக்கும். அதன்பிறகு கட்டிட வேலைக்கும், ஓட்டல் வேலைக்கும், பிற கூலி வேலைக்கும் தான் செய்கிறோம்.

    மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். நாங்கள் தயாரிக்கும் அகல்விளக்குகளை மாவட்ட நிர்வாகமே கொள்முதல் செய்ய வேண்டும். எங்கள் தெருவில் காலிமனை உள்ளது.

    அந்த இடத்தில் அகல்விளக்குகள் தயாரிக்க மேற்கூரை அமைத்து கொடுத்தால் மழை காலத்திலும் அகல்விளக்குகள் நனையாமல் இருக்க வசதியாக இருக்கும். அகல்விளக்குகள் தயாரிக்க உதவும் மண் திருவை வழங்க வேண்டும் என்றார்.

    ×