search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aliyar dam"

    • அணை கட்டுவதற்கு முன் இந்த வழித்தடத்தில் மழை காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
    • நீர்மட்டம் குறையும் போது, ஆங்கிலேயர் காலத்து பாலம், சாலை வெளியே தெரியும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் அதன்பிறகு எதிர்பார்த்தப்படி மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மழை பெய்யாததாலும், கோடை காலம் முன் கூட்டியே தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் குறைந்ததால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மற்றும் வால்பாறை செல்வதற்கு போடப்பட்ட தார் சாலை வெளியே தெரிகிறது. தற்போது நீர்மட்டம் சரிவால், ஆங்கிலேயர் காலத்து பாலம் மற்றும் தார் சாலை வெளியே தெரிகின்றன. 100 ஆண்டுகள் கடந்தும் பாலமும், தார் சாலையும் இன்னும் அப்படியே காட்சி அளிக்கின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் நின்று கண்டு ரசித்து செல்கின்றனர்.

    ஆழியாறு அணை கட்டுவதற்கு முன் மலை பகுதியான வால்பாறை செல்வதற்கு 1897-ம் ஆண்டு சாலை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தது. இதையடுத்து கரடு முரடான மலைப்பாதையில் சாலை அமைக்க லோம் என்பவரை அப்போதைய ஆங்கிலேய அரசு நியமித்தது. அதனைத்தொடர்ந்து 1903-ம் ஆண்டு சாலை பணிகள் முடிந்ததும், சென்னை மகாண கவர்னர் லார்ட் ஆம்பிள் சாலை திறந்து வைத்தார். ஆழியாறில் இருந்து பாரளை வழியாக சிறுகுன்றாவுக்கு சாலை அமைக்கப்பட்டது.

    அணை கட்டுவதற்கு முன் இந்த வழித்தடத்தில் மழை காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இந்த பாதையை வால்பாறைக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாடு சுதந்திரம் பெற்ற பின், காமராஜர் ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பகுதி பாசனம் பெறும் வகையில் அணை கட்ட திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1962-ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. அணை பகுதியில் ஒரு சில கிராமங்களும், வால்பாறை செல்லும் ரோடு இருந்தது.

    இதையடுத்து வால்பாறை செல்ல மாற்று வழிப்பாதை அமைக்கப்பட்டது. மேலும் அங்கு குடியிருந்த மக்களுக்கும் மாற்று இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அணை நிரம்பினால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் தண்ணீர் மூழ்கி விடும். நீர்மட்டம் குறையும் போது, ஆங்கிலேயர் காலத்து பாலம், சாலை வெளியே தெரியும்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணையாக பரம்பிகுளம் அணை விளங்குகிறது. 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருவதால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71½ அடியாக உயர்ந்தது.

    தற்போது அணையில் 17 ஆயிரத்து 670 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் உயர்ந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நேற்று இரவு உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை உபரிநீர் திறப்பு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கேரளாவில் உள்ள பெருங்கல்குத்து என்ற அணைக்கு செல்கிறது. அந்த அணை நிரம்பிய பின்பு உபரிநீர் திருச்சூர் சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதேபோல் ஆழியாறு அணை 117 அடியை எட்டியது. இதனால் 2-வது முறையாக நேற்று மாலை மதகுகள், பைபாஸ், மின் உற்பத்தி நிலையம், கால்வாய்கள் வழியாக மொத்தம் 2140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், உபரிநீர் வெளியேற்றுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆழியாற்றங் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×