search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell Phone games"

    • அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
    • மின்காந்த கதிர்வீச்சுகள் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம். ஷாப்பிங் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்துமே உட்கார்ந்த இடத்திலிருந்து செல்போன் வைத்து முடித்து விடுகிறோம். ஒரு பக்கம் இதனால் நாம் சோம்பேறியாக மாறினாலும் இன்னொரு பக்கம் நமக்கே தெரியாமல் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஏன்...? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன...? என்பதை பற்றி பார்க்கலாம்.

     செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்த செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

    நாம் குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களை வைத்து சோறு ஊட்டும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டும் இல்லாமல் செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற உதாக்கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

    அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிக அளவு கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது.

    குழந்தைகள் மீது இந்த புற ஊதாக்கதிர்கள் தாக்கும் போது அவர்கள் கண்கள் பாதிப்படையக் கூடும். மேலும் இது தூக்கமின்மை, மூளை செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் நடத்தையை கூட சில நேரங்களில் பாதிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது தெரியாமல் பெற்றோர்கள் பலரும் குழந்தைகள் அழுகையை நிறுத்த பயன்படுத்தும் ஆயுதமாகவே செல்போன் மாறிவிட்டது.

    அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம், மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல் ஏற்படலாம் மற்றும் உடல் செயல்பாடு குறைவதால் உடல் பருமன் மற்றும் மோசமான எலும்பு ஆரோக்கியம் ஏற்படும்.

    செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.

    அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

    • ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன.
    • குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம்.

    இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விசயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் தோறும் காண முடிகிறது. செல்லுக்கு கட்டுப்படும் குழந்தைகள் தாயின் சொல்லுக்குகூட கட்டுப்படுவது இல்லை. அந்த குழந்தைகளே செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் போன்ற படங்களை பார்த்தும் ரசிக்கிறது.

    அதை பார்த்ததும் 'ஆஹா... என் பிள்ளையின் ஆற்றலைப் பார்...! என்று பெருமைப்படும் பெற்றோரும் உண்டு. என் குழந்தைகள் எப்போதும் செல்போனில் தான் விளையாடும். அவனுக்கு செல்போனை கையில் கொடுத்தால் போதும் இரவில் கூட பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்குவான். 'என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும். செல்போனை கையில் கொடுத்தால்தான் சாப்பிடும்..." இது தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதி!

    ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோ பசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

    ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது.

    உலகம் முழுவதும் செல்போன் விற்பனை செய்யும் உலக கோடீசுவரரான டிம் குக் தனது குழந்தைக்கு விளையாட செல்போன்கள் கொடுப்பதில்லை என்பதை நம்ப முடிவதில்லை.

    ஆனால் குழந்தையின் ஆரோக்கியம் கருதி செல்போன் கொடுப்பது கிடையாது என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று கால கட்டம்தான் பலரையும் கட்டாயமாக செல்போனுக்குள் மூழ்க வைத்தது. ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் செல்போன்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. எனவேதான் தேவைக்கான என்ற நிலை மாறி செல்போன்களிலேயே மூழ்க வைத்து விட்டது.

    குழந்தைகள் செல்போன்களின் ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பல், கண் பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் ஏற்படலாம். பேச்சு திறன் குறையும். மற்றவர்களோடு பேசும் திறன் குறையும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து பழகவோ, விளையாடவோ முடியாமல் தனிமைப்பட்டு விடுகின்றன.

    குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பில் சுமார் 60 சதவீத குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம். அதிலும் 31 சதவீதம் பேர் 2 வயதுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    குழந்தை பருவம் என்பது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எந்நேரமும் அல்லது அதிக நேரம் போன்களில் மூழ்கி இருக்கும் போது, அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை தவிர்க்கி றார்கள்.

    தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு செய்ய கூடியது. அதிலும் குறிப்பாக நீலநிற கதிர்வீச்சு தொடர்ந்து கண்களில் ஊடுருவுவது, ஒருவரது விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை பாதிக்கிறது. தவிர குறுகிய கால நினைவாற்றலில் குறுக்கிடுகிறது.

    இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் புளூ ரேடியேஷன்ஸ், இது இரவல்ல பகல் என்று மூளையை நம்ப வைக்கிறது. இதனால் உடல் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே அடுத்த நாள் தூக்கமின்றி களைப்பாகவும் எந்த வேலையையும் முழு திறனில் செய்ய முடியாமலும் ஒருவர் பாதிக்கப்படுவார்

    செல்போனில் மூழ்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு ஓரிரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஏன்தான் விடுமுறை விட்டார்களோ என்று நினைக்கிறார்கள்.

    அமேசான் நிறுவனம் நாடு முழுவதும் 10 மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 2 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் 750 பெற்றோரிடம் ஆய்வை நடத்தி உள்ளது.

    செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களில் மூழ்கும் போது குழந்தைகளிடம் சுறுசுறுப்பான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதாக 90 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ள னர்.

    2 மணி நேரம் வரை செல்போன்களை பயன்படுத்தலாம் என்று கூறும் நிலையில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    96 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அழைத்து செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    82 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகள் கவனத்தை திசை திருப்பி வேறு எந்தவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

    இதில், குழந்தைகள் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 50 சத வீத பெற்றோரும், நல்லொழுக்கம் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமென 45 சதவீத பெற்றோரும், நட னம், பாட்டு, இசைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 36 சதவீத பெற்றோரும், கலை மற்றும் கைவினை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற் றோரும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும் விருப்பம் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது' என்றார்.

    நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.
    வித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

    படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.

    அத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

    அந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.

    காரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.

    நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.

    அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.

    ‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.

    நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.



    அதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.

    விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.

    மனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.

    ஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.

    மீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.

    தூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.

    கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.

    கேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    ஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

    எனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.

    உதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்
    ×