search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone store"

    புதுவை அண்ணாசாலை யில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 செல்போன்கள் மீட்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட் டையை சேர்ந்தவர் சதீஷ், இவர் அண்ணாசாலையில் செல்போன்கடை வைத்துள்ளார். கடந்த 19-ந் தேதி இரவு சதீஷ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்று விட்டனர். இந்த கொள்ளை குறித்து சதீஷ் பெரிய கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகளை பதிவு செய்தனர்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் 3 மர்ம மனிதர்கள் நடமாடியது தெரிந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது செல்போன் கடையில் திருடியது சென்னையை சேர்ந்த விஷ்ணு (21) உள்பட 3 பேர் என்பது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து பெரிய கடை போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும் சென்னை சென்று தேடினர். அப்போது போலீசார் வருவதை அறிந்ததும் விஷ்ணு அங்கிருந்து தப்பி காலாப்பட்டு பகுதிக்கு வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் நேற்று இரவு காலாப்பட்டு பகுதியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய அவரது நண்பர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    அண்ணாசாலையில் செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று காலை சதீஷ் வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து சதீஷ் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.

    செல்போன் கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சியில் செல்போன் கடையை சூறையாடியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அருண்குமார் (வயது 20). இரு சக்கர வாகனங்களுக்கு சீட் கவர்கள் தைக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் திருச்சி என்.எம்.கே. காலனி 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்றனர். அங்கு தாங்கள் வைத்திருந்த செல்போனை வாங்கிக்கொண்டு, அதற்கான பணத்தினை கொடுக்குமாறு கூறியுள்ளனர். அப்போது வினோத் இங்கு ரீசார்ஜ் மட்டுமே செய்வோம் செல்போன் வாங்கி, விற்பது கிடையாது என கூறியுள்ளார்.

    தொடர்ந்து இருவரும் நாங்கள் இதே பகுதியை சேர்ந்தவர்கள் தான். எங்களிடம் இதனை வாங்கிக் கொள்ளுங்கள் என தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு வினோத் தொடர்ந்து மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, அவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் இது குறித்து வினோத்குமார் தனது உறவினரான கரிகாலன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார். வினோத் மற்றும்  உறவினர்களும் கடையினை சூறையாடிய அருண்குமார், ஜாகீர்உசேன் ஆகிய இருவரையும் தாக்குவதற்காக தேடி அலைந்தனர்.

    அப்போது இவரும் மேலப்புதூர் ரெயில்வேகேட் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற வினோத்குமார், கரிகாலன் (35), சிவா (23), மல்லிகைபுரத்தை சேர்ந்த ரீகன் (26) ஆகிய 4 பேர் அவர்களை தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அருண் குமாரின் தலையில் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற ஜாகீர் உசேனின் கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    பின்னர் அரிவாள் வெட்டில் காயமடைந்த இருவரையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அருண்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். ஜாகீர் உசேனுக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக  அடிதடி வழக்காக இதனை பதிவு செய்த போலீசார், தற்போது கொலை வழக்காக மாற்றி வினோத்குமார், கரிகாலன், சிவா, ரீகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த திலீப், கல்கண்டார்கோட்டையை சேர்ந்த வினோத், முதலியார் சத்திரத்தை சேர்ந்த மதன், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×