search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Change the strap"

    • பட்டா மாறுதல் விண்ணப்பிக்க இனி தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்.
    • இருந்த இடத்திலே இருந்து விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை :

    பட்டா மாறுதல் செய்ய பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும் மாறுதல் பெறுவதற்கு பலமுறை அலைய வேண்டிய சூழல் இருந்தது.இதையடுத்து பொதுமக்களின் தேவைக்காக, இ - சேவை மையங்கள் வாயிலாக 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தது.

    இந்த முறையில் விண்ணப்பித்தால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் சரிபார்த்து தாசில்தார் கையெழுத்திட வேண்டும். இதை ஆன்லைன் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.தற்போது இதை எளிமையாக்கும் வகையில் இருக்கும் இடத்தில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாலுகா அலுவலகம் மற்றும் சப் - கலெக்டர் அலுவலகங்களில் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் பட்டா மாறுதல் விண்ணப்பிக்க இனி தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம். இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற வேண்டாம். எங்கு இருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து பட்டா மாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

    பட்டா மாறுதலின் நடவடிக்கையின் போது ஒவ்வொரு நிலையையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், பொதுமக்கள், பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா புலப்படம், அ - பதிவேடு ஆகியவற்றை எங்கிருந்தும், எந்நேரத்திலும் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் வாயிலாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், எங்கிருந்தும், எந்நேரத்திலும் என்ற திட்டத்தின்படி பட்டா மாறுதலுக்கு இருந்த இடத்திலே இருந்து விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வீண் அலைச்சலை பொதுமக்கள் தவிர்க்கலாம். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றனர்.

    ×