search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Marina Beach"

    • 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டம்.
    • தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி.

    சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி ரூ. 7 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்தது.

    2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கீழ் தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.

    இதேபோல், முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை வரவேற்பு அறை அமைக்கப்படுகிறது,.

    இந்தத் திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

    கடந்த அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே, தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில், பாய்மர படகு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், இன்று மக்கள் கடற்கரை வரத் தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபடப் போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டது.

    மேலும், இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

    காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #KaanumPongal
    சென்னை:

    காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் இன்று தமிழகம் முழுவதும் களை கட்டியது.

    சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். காலையில் இருந்தே கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் கடற்கரையை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மினி லாரிகளிலும் மக்கள் வந்திருந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள்.

    இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர்.

    தங்களது வீடுகளில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்த உணவுகளை கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.

    சிறுவர்களும் பெரியவர்களும் பாரபட்சமின்றி கூடி விளையாடி மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் பலர் கபடி விளையாடினார்கள்

    கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டது.

    காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள், கமி‌ஷனர்கள் மகேஸ்குமார், தினகரன், இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 140 நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    மணல் பரப்பில் 13 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி-டாக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கட்டுப்பாட்டறைக்கு வாக்கிடாக்கி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கினர். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்பட்டன.



    கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர். ஆயுதப்படையின் குதிரைப் படையுடன் கூடுதலாக 16 குதிரைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டது.

    இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. #KaanumPongal

    சென்னை மெரினா கடற்கரையில் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்தது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests
    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான தமிழர்கள் நடத்திய போராட்டம் வெற்றியில் முடிந்தது.

    இந்த போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

    இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஒருநாளைக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.



    இதற்கு தனி நீதிபதி அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிபதி அளித்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. மெரினா விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட், அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனைத் தொடர்ந்து மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், இதே கோரிக்கையுடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests
    சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்படும் என அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.#TNMinister #Pandiarajan
    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ் பண்பாட்டு மையம் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறேன்.

    இதற்காக தமிழ் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் அகராதி சார்ந்த இணைச்சொல், எதிர்சொல், சொல் செயலி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக சொற்குவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை இயங்க தொடங்கிவிட்டது. இதேபோல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜோகனஸ்பர்க் பல்கலைக்கழகம், மலேசியா பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு தமிழ் ஆய்வு இருக்கை தொடங்கப்பட உள்ளது.

    தமிழின் தொன்மையை உலகத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டுவதற்காக யுனெஸ்கோவின் உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை திருக்குறளுக்கு பெற்றுத்தர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் இணையவாசல் உருவாக்கப்பட உள்ளது. தமிழுக்கு 63 மாநில அரசு விருதுகளும், 8 மத்திய அரசு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்படும். தமிழ் பல்கலைக்கழகத்தை உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 100 இடங்களுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Pandiarajan 
    ×