search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில், 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
    X

    பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில், 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

    பொங்கல் பண்டிகையையொட்டி மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். #Pongal2019 #MarinaBeach
    சென்னை:

    தை முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும், 17-ந் தேதி காணும் பொங்கலும் களை கட்டும். அன்றைய தினம் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழிப்பார்கள். அன்று காலையிலேயே இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் உணவு வகைகளை சமைத்து எடுத்துச்சென்று அங்கேயே சாப்பிடுவார்கள். மாலையில்தான் வீடு திரும்புவார்கள்.

    மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்படும்.

    மெரினாவில் கடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையையொட்டியுள்ள பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி முழுவதையும் கண்காணிப்பதற்காக 6 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.


    அங்கிருந்தபடி பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிப்பது எளிதாகிறது. கடலில் இறங்கி குளிப்பவர்களை கட்டுப்படுத்த குதிரை படை வீரர்களும் இப்போதே ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையமும் கட்டப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறை இந்த ஆண்டும் காணும் பொங்கல் தினத்தில் கடைபிடிக்கப்பட உள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாமல்லபுரத்திலும் பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் திரளுவார்கள் என்பதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Pongal2019 #MarinaBeach
    Next Story
    ×