search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது.
    • கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகையாறு தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் நீர்வரத்து அதிகமாகக்கூடும் என நீர் வளத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நீர்வரத்து அதிகரித்த நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1171 கனஅடி நீர் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.23 அடியாக உள்ளது. அணையில் 3273 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. 420 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர்திறக்கப்படுகிறது. அணையில் 3054 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் பல நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வட்டக்கானல், வெள்ளக்கவி ஆகிய இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு குறையாமல் இருப்பதால் அருவி பகுதிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    இதனால் கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

    வீரபாண்டி 2.8, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 0.6, தேக்கடி 1.4, சண்முகாநதி 1.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.97 அடியாக உள்ளது.
    • வரத்து 1171 கன அடியாகவும், இருப்பு 3223 மி.கன அடியாகவும் உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் தேவைக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    அதன்படி முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி ராமநாதபுரம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 9 நாட்களில் 1830 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட பாசனத்திற்காக இன்று காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை முதல் குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 569 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.97 அடியாக உள்ளது. வரத்து 1171 கன அடியாகவும், இருப்பு 3223 மி.கன அடியாகவும் உள்ளது.

    இன்று முதல் 10 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தேனி, மதுரை மாவட்டத்தில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 3-ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.40 அடியாக உள்ளது. வரத்து 463 கன அடி. திறப்பு 1033 கன அடி. இருப்பு 3103 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 421.14 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 34.29 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    • தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிக்கு தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    வார விடுமுறை என்பதால் ஏராளமானோர் மேகமலை அருவியில் உற்சாகமாக குளித்துக் கொண்டு இருந்தனர். நேற்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் திடீரென கன மழை பெய்ததால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனை கண்காணித்த வனத்துறையினர் உடனடியாக அருவி பகுதிக்கு சென்று அங்கு குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அவசர அவசரமாக வெளியேற்றினர்.

    இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அருவி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    நீர் வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 59.28 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 1349 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 3199 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    3472 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக உள்ளது. 763 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3242 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. 77 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 64.34 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 46, அரண்மனைபுதூர் 8, வீரபாண்டி 8.4, பெரியகுளம் 4, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 12.2, போடி 0.4, உத்தமபாளையம் 4.4, கூடலூர் 2, பெரியாறு அணை 0.4, தேக்கடி 7.2, சண்முகாநதி 5.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.

    பூர்வீக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 65 அடி வரை உயர்ந்த நீர் மட்டம் தற்போது 61.12 அடியாக குறைந்துள்ளது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியில் இருந்து 1156 கன அடியாக உயர்ந்துள்ளது.

    மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை தொடரும் என்ற நம்பிக்கையில் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது. அணைக்கு 534 கன அடி நீர் வருகிற நிலையில் 1105 கனஅடி நீர் திற்கப்படுகிறது. 3301 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும், திறப்பும் 34.29 கன அடி.

    ஆண்டிபட்டி 4.2, அரண்மனைபுதூர் 0.6, பெரியகுளம் 12.4, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 1.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 3.6, பெரியாறு அணை 2.4, தேக்கடி 4.4, சண்முகாநதி அணை 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • அனைத்து வேலைகளையும் மாணவிகளை வைத்தே மேற்கொண்டு வருவதாக புகார் வந்துள்ளது.
    • தங்களை அடித்து துன்புறுத்துவதாக மாணவிகள் 3 பேர் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே கோட்டூரில் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியை சேர்ந்த மாணவிகள் தங்களது வார்டன் தங்களை அடித்து துன்புறுத்துவதாக தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.

    விடுதியில் வார்டனாக இருக்கக்கூடிய சசிரேகா மற்றும் சமையலாளர் மாலதி ஆகிய இருவரும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை அடித்து துன்புறுத்தி விடுதியில் உள்ள அனைத்து வேலைகளையும் மாணவிகளை வைத்தே மேற்கொண்டு வருவதாகவும், தரமற்ற உணவுகளை கொடுப்பதாகவும், இது குறித்து வெளியில் யாரிடமும் சொன்னால் தங்களை அடித்து துன்புறுத்துவதாக மாணவிகள் 3 பேர் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.

    மேலும் விடுதியை சேர்ந்த மாணவிக்கு வாயில் பச்சை மிளகாய் வைத்து சாப்பிட சொல்லி துன்புறுத்தியதாகவும், இதனால் மாணவி ஒருவர் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் கூறினர். விடுதி வார்டன் மற்றும் சமையல் அலுவலர் மீது மாணவிகள் கூறிய புகார் குறித்து விசாரணை நடத்துமாறு பெற்றோர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது.
    • பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு இன்று காலை முதல் 3151 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 65 அடியை கடந்த நிலையில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், மழை முற்றிலும் நின்று விட்ட காரணத்தாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர் வரத்து 1125 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 4337 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. நீர் வரத்து 648 கன அடி. திறப்பு 1107 கன அடி. இருப்பு 3460 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 76 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 42.14 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    சண்முகாநதி அணை நீர் மட்டம் 52.50 அடி. இருப்பு 79.57 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை.

    • இவர்களது பழக்கம் தெரியவரவே கணவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
    • இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ரேசன் கடை தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவனிகா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களது வீட்டுக்கு எதிரில் வசிக்கும் ராம்குமார் (24) என்பவருக்கும் அவனிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு வந்தது. ராம்குமார் மற்றும் கருப்பையா இருவரும் நண்பர்கள் என்பதால் இந்த பழக்கம் வெளியில் தெரியவில்லை. அதன் பின்னர் கணவர் வீட்டை விட்டு சென்ற போது ராம்குமார் சென்று வந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.

    பின்னர் இவர்களது பழக்கம் குறித்து கணவர் கருப்பையாவுக்கும் தெரியவரவே அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

    நேற்று மாலை வீட்டில் அவனிகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் ராம்குமார் வீட்டுக்குள் புகுந்தார். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டனர்.

    இதனை அறிந்த ராம்குமார் மற்றும் அவனிகா அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ராம்குமார் சத்தம் போட்டுதான் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளமாட்டேன் என தெரிவிக்கவே பொதுமக்கள் கதவை திறந்து விட்டனர். அவர் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த அவனிகா தனது கள்ளத்தொடர்பு ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதே என வேதனையடைந்தார். இந்த அவமானத்தால் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசாருக்கு அவரது தாயார் நவநீதா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.
    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.

    மேலும் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 64.96 அடியாக உள்ளது. அணைக்கு 1309 கன அடி நீர் வருகிறது. 4622 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் வைகை பூர்வீக பாசன பகுதி 3க்கு இன்று முதல் 9 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை வைகை அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று முதல் 18-ந் தேதி வரை 9 நாட்களுக்கு 1830 மி.கன அடியும், வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 10 நாட்களுக்கு 418 மி.கன அடியும் வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 8 நாட்களுக்கு 752 மி.கன அடியும், 3000 அடிக்கு மிகாமல் 27 ஆயிரத்து 529 ஏக்கர், 40 ஆயிரத்து 743 ஏக்கர் மற்றும் 67 ஆயிரத்து 837 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அடுத்த ஆண்டு மார்ச் வரை வைகை அணையில் வைகை பங்கீட்டு நீர் 1354 மி.கன அடி எட்டும் போதெல்லாம் வைகை பூர்வீக பாசன பகுதி 1, 2, 3க்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 விகித அடிப்படையில் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.60 அடியாக உள்ளது. 766 கன அடி நீர் வருகிற நிலையில் 1100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 3539 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 100 கன அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 52.30 கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

    • மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள கீழப்புதூரை சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் (வயது28). இவருக்கும் ஆண்டிபட்டி அருகில் உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்த மரியாள் என்பவரும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் தீபாவளியை தனது மாமியார் வீட்டில் கொண்டாடுவதற்காக மனைவி மரியாளுடன் ராஜ்குமார் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி மெயின்ரோட்டில் வந்துகொண்டிருந்தார். திம்மரசநாயக்கனூர் முருகன் கோவில் அருகே வந்தபோது எதிரே குமுளியில் இருந்து வந்த லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது மனைவியின் தலையில் பலத்த காயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் சிகிச்சையில் இருந்த ராஜ்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி கதறி அழுத நிலையில் அவரும் இன்று காலை உயிரிழந்தார். காதல் திருமணம் செய்த தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது இரு குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடிகை கஸ்தூரி மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சியை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நடிகை கஸ்தூரி மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், ஆண்டிப்பட்டியில் நடிகை கஸ்தூரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.
    • பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த சண்முகமணி-நளினி தம்பதியின் மகள் சனா (வயது11). இவர் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்தவர். இருந்தபோதும் தாய் தந்தையர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் தமிழக கலைகள் மீது சிறுமிக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது.

    இதனால் தமிழகத்தின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம் கற்க ஆர்வம் கொண்டார். அதன்படி அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் கடந்த 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.

    பரதநாட்டியம் பயின்று வரும் காலகட்டத்தில் பள்ளி படிப்பு கெடாமல் இருப்பதற்காக இங்குள்ள தனியார் ஆங்கில வழி கல்வியில் 5-ம் வகுப்பு வரை பயின்று வந்தார்.

    மேலும் பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார். இதனையடுத்து உலக சாதனைக்காக பரத முத்திரைகள் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

    இவர் 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து காட்டி விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    அவருக்கு போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் சான்றுகள் மற்றும் பதக்கங்கள், கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.

    முற்றிலும் தமிழ் பேசத் தெரியாத நிலையில் தமிழர்களின் பாரம்பரிய நாட்டியக் கலையான பரதநாட்டியம் பயில்வதற்கு அமெரிக்காவில் இருந்து போடி வந்து பரத முத்திரைகளில் உலக சாதனை படைத்து மீண்டும் அமெரிக்கா திரும்ப செல்ல உள்ளார். 

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் முக்கிய நீர்வரத்து பகுதியாக வருசநாடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. அரசரடி, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஓடைகள் வழியே சிற்றாறுகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது.

    மேலும் வைகையின் துணை ஆறுகளாக சுருளியாறு, கொட்டக்குடி, வறட்டாறு, வராக நதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.

    இந்த ஆறுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரை வைகைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே நீர்வரத்து இருக்கும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் தேனி, பழனிசெட்டிபட்டி அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது. வருசநாடு மூல வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் அமச்சியாபுரம் அருகே உள்ள அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நீர்வரத்தை கணக்கில் கொண்டு வைகை அணையில் உள்ள அளவீட்டு மையத்தில் அணையின் நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது. மழை மற்றும் அவசர காலங்களில் நீர்மட்டத்தில் ஏற்படும் திடீர் உயர்வுக்கு தகுந்தபடி நீர் வெளியேற்றம் செய்யப்படும். கடந்த 3 நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.34 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2273 கன அடியாக உள்ளது. நேற்று வரை மதுரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு சேர்த்து 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4484 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 68.5 அடியை எட்டியதும் 2ம் கட்ட எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்படும்.

    கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் நீர் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் அணைக்கு வரும் தண்ணீர் அளவு, திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஆகியவற்றை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.95 அடியாக உள்ளது. வரத்து 2022 கன அடி. திறப்பு 1100 கன அடி. இருப்பு 3608 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 55 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 184 கன அடி முழுவதும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 357 கன அடி முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை அருவியிலும் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வீரபாண்டி 12.4, பெரியகுளம் 25, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 36, போடி 7.2, ஆண்டிபட்டி 2.8, பெரியாறு 5.4, சண்முகாநதி அணை 2, அரண்மனைபுதூர் 1.6, உத்தமபாளையம் 1.8, கூடலூர் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×