என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வேலூர்
- நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள்.
- அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைகழகம் சார்பில் மாணிக்க விழா மற்றும் ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதி தொடக்க விழா நேறறு நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதியை திறந்து வைத்தும், மாணிக்க விழா மற்றும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதன்பின் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
மாணிக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனின் யோசனை, அனுபவம் மற்றும் திட்டங்கள் தான் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணம் ஆகும். அவர் இளைய தலைமுறையினருக்கு கல்வியோடு தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளார். 4 தலைமுறைகளை கண்டவர். அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். அவருடைய ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணமாகும். அவர் 1984-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரியை தொடங்கினார். 2001-ல் இது பல்கலைக்கழகமாக மாறியது. முதலில் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்பொழுது 1 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
அடுத்து அவர் டெல்லியில் தன்னுடைய பல்கலைகழகத்தை தொடங்க வேண்டும். இவர் சமூக உயர்வுக்காக பாடுபட்டவர். இந்தியாவில் 27 சதவீதம் பேருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. உலகம் முழுதும் உள்ளவர்கள் இந்தியாவை அங்கீகாரம் செய்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் 18 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படைக் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது. அதனால் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். இந்தியா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள். அரசு வேளாண்மைத் துறையில் உள்ள சிக்கலை தீர்த்து அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால் இன்னும் மக்களுக்கு அதிகமான உதவிகள் விரைந்து தேவைப்படுகிறது.
எல்லாவற்றையும் அரசே செய்து விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. அரசே அனைத்தையும் செய்துவிட முடியாது. அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
தனியார் நிறுவனங்கள் கல்வி, சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி கிராம மக்களுக்கு உதவிட வேண்டும். மாணவர்கள் பெரியவர்களை மதித்து நடப்பதோடு தங்களுடைய குறிக்கோளை மறந்து விடக்கூடாது. இன்றைய மின்னணு சாதனங்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. அதனை கவனமுடன் கையாள வேண்டும். தேவைப்படும்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செல்போனை கொடுக்க வேண்டும். தற்போது செல்போனிலேயே அதிக நேரம் மாணவர்கள் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இதே நிலை நீடித்தால் தங்களது அப்பா, மனைவி பெயரை சொல்வதற்கு கூட கூகுளை தான் தேடும் நிலை ஏற்படும்.
அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். நடு ஜாமத்தில் தூங்க செல்லக்கூடாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். மாணவர்கள் உயர்வாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
பீட்சா, பர்கர் எல்லாம் இந்தியாவின் உணவு இல்லை. இவை அனைத்தும் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படும் உணவாகும்.
நாம் புரோட்டின் மிகுந்த சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.
நீர் நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும்.
ஓட்டு என்பது சக்தி வாய்ந்தது. உங்களுடைய ஓட்டு உங்களுடைய தலை எழுத்தை மாற்றும்.
எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்கள் எத்தனை மொழியை கற்றுக் கொண்டாலும் தங்களது தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வி.ஐ.டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
முடிவில் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக் நன்றி கூறினார்.
- நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
- தாமிரபரணி ஆற்றை நாளை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
வேலூர்:
வேலூரை அடுத்த அணைக்கட்டு ஊராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே ஆதனூர்-குமாரமங்கலம் தடுப்பணை, புகளூர் கதவணை திட்டத்தை கிடப்பில் போட்டது குறித்து கொஞ்சம் கூட ஆதாரமில்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்த திட்டம் அவரால் தொடங்கப்பட்டது. சரியாக ஆய்வு செய்யாமல் இடத்தை தேர்வு செய்துவிட்டார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த மறுஆய்வு செய்யவே பாதி பணம் போய்விட்டது. இதனை அவர் சட்டமன்றத்தில் பேசட்டும் சரியான பதில் அளிக்கிறேன்.
நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மேட்டூர் அணையை தூர்வார முடியாது. யாரும் அங்கு மணல் எடுக்கமாட்டார்கள். தாமிரபரணி ஆற்றை நாளை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காட்பாடி ரெயில் நிலையம் அருகே மற்றொரு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
- மகளிருக்கு உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு, உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது:-
கடந்த தேர்தலில் உங்களுக்கெல்லாம் சொன்னேன். இந்த முறை எனக்கு வாக்களித்தால், 4 திட்டங்கள் வரும் என்றேன். அதன்படி பொன்னையில் ரூ.48 கோடியில் பாலம் கட்டி கொடுத்துள்ளேன். ஒரு கல்லூரி கொண்டு வந்துள்ளேன்.
சேர்க்காடு கூட்ரோட்டில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் பயன்பாட்டிற்கு வரும். இப்படி பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொண்டு வர சிப்காட் அமைக்கப்பட உள்ளது.
காட்பாடி ரெயில் நிலையம் அருகே மற்றொரு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கட்டிடம் இல்லாத பள்ளிக்கு கட்டிடம் கட்டப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். மகளிருக்கு உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு, உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
என்னை கேட்கிறார்கள் எப்படி சார் ஒரே தொகுதியில் வெற்றி பெறுகிறீர்கள் என்று, நான் தொகுதி என்று நினைக்கவில்லை. தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன்.
எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த நீங்கள்தான் என் தெய்வம்.
அதனால் தான் இந்த தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெற்றுள்ளேன்.
சட்டமன்றத்தில் கருணாநிதி 56 ஆண்டுகள் இருந்துள்ளார். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருந்து வருகிறேன்.
என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். மற்ற தொகுதியுடன் ஒப்பிட்டு பாருங்கள் மற்ற தொகுதிகளை விட நான் அதிக திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.
- சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி வீட்டில் வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது டி.ஐ.ஜி. வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிவக்குமாரை சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.
அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஏற்கனவே வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து வார்டன்கள் சுரேஷ், சேது, சிறைக்காவலர்கள் ராஜூ, ரஷித், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறைக்காவலர் சரஸ்வதி, செல்வி ஆகிய 11 பேர் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- பிளாட்பாரம் வழியாக ரெயிலில் ஏறாமல் தண்டவாளப் பகுதியில் இருந்து செந்தில் குமார் ஏறினார்.
- செந்தில் குமார் ரெயில் சக்கரத்தில் சிக்கியதால் அவருடைய கால்கள் துண்டானது.
வேலூர்:
சென்னை அண்ணாநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் சென்னையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
வேலூர் காட்பாடி வந்திருந்த இவர் இன்று அதிகாலை மங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக வந்தார்.
2-வது நடைமேடையில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. பிளாட்பாரம் வழியாக ரெயிலில் ஏறாமல் தண்டவாளப் பகுதியில் இருந்து செந்தில் குமார் ஏறினார்.
அப்போது ரெயில் திடீரென புறப்பட்டது. இதில் நிலை தடுமாறி செந்தில்குமார் கீழே விழுந்தார். அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கியதால் அவருடைய கால்கள் துண்டானது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காட்பாடி ரெயில்வே போலீசார் செந்தில்குமார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் அடையாள அட்டை மூலம் இறந்தவர் செந்தில்குமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
- அதிகாலை சுமார் 5 மணி முதல் 10.30 மணிக்கு மேல் வரை பணிகள் நடந்தது.
வேலூர்:
அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ரேணிகொண்டா அரக்கோணம் வழியாக வந்து கொண்டிருந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
இதனால் பெட்டிகளை விட்டு பிரிந்து என்ஜின் மட்டும் தனியாக கழன்று ஓடியது.
இதனைக் கண்டு என்ஜின் டிரைவர் திடுக்கிட்டார். ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் ஏதோ பெரிய விபத்து நடக்கப்போவதாக எண்ணி அலறி கூச்சலிட்டனர்.
என்ஜின் மீது பின்னால் வேகமாக வந்த பெட்டிகள் மோதாமல் இருக்கும் வகையில் லாவகமாக டிரைவர் என்ஜினை இயக்கினார்.
திருவலம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினை விட்டு பிரிந்த பெட்டிகள் தானாக தண்டவாளத்தில் நின்றன. அப்போது என்ஜினை நிறுத்திய டிரைவர் மீண்டும் பின்னோக்கி வந்து பெட்டிகள் அருகே நிறுத்தினார். இறங்கி பார்த்தபோது என்ஜினில் இருந்த கப்பளிங் உடைந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்த ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை சுமார் 8.45 மணி முதல் 10.50 மணி வரை பணிகள் நடந்தது. நடுவழியில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நின்றதால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. அதிலிருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டிடி தமிழ் நிகழ்ச்சியில் திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில், நாட்டின் பிரதமரே திராவிடர்தான் என்று பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, "திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. தர் என்றால் சமஸ்கிருதத்தில் மரம் என்று அர்த்தம். தக்காண பீடபூமிக்கு தெற்கே உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் 56 தேசங்கள் இருந்தது. அங்கு 2 பெரிய நிலப்பரப்புகள் இருந்தது. அதற்கு பெயர் பஞ்ச திராவிடம். இதில் முதல் மாநிலமே கூர்ஜரம் அதாவது குஜராத். அதனால் இந்த நாட்டின் பிரதமரே திராவிடர் தான். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கல்லூரி மாணவிகள் வியப்பாக பார்பது போன்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
- மாணவிகளுக்கு இடையூறினை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர்:
வேலூரில் வாலிபர் ஒருவர் ரீல்ஸ் மூலம் லைக் பெறுவதற்காக பெண் வேடமிட்டு விலை உயர்ந்த சொகுசு பைக்கில் வேலூர் நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பெண் போல அலங்காரம் செய்து மற்றும் தலையில் பூ வைத்து சேலை உடுத்தி, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதிகள், பழைய பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார். மேலும் அவர் கல்லூரி முடிந்து செல்லும் பெண்கள் முன்னிலையில் வேகமாக செல்வது போன்றும், அதை அந்த கல்லூரி மாணவிகள் வியப்பாக பார்பது போன்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பெண்கள் அருகில் சென்று மோதுவது போன்று வேகமாக செல்வதும், பைக்கை முறுக்கி டயர் புழுதி பறக்க செல்வது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இது மாணவிகளுக்கு இடையூறினை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை தேவை என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாகாயம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசம் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் வாலிபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.
- தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி - குடியாத்தம் இடையே இயங்கிவரும், அரசு டவுன்பஸ் மிகவும் பழுதான நிலையில் ஓடிக்கொண்டு இருந்தது. இதை புதியதாக மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்த நிலையில் தானியங்கி கதவுகளுடன் கூடிய புதிய டவுன்பஸ் அண்மையில் விடப்பட்டது.
இந்த பஸ் கே.வி.குப்பம் வழியாக சென்னறாயனபள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று சில பயணிகளை இறக்கிவிட்டது. அப்போது குடியாத்தம் செல்ல ஒரு பயணி ஏறினார். அப்போது முன்னதாக ஒரு தெரு நாய் திடீர் என்று பஸ்சின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே ஏறிக்கொண்டது. அழையா விருந்தாளியான அந்த நாய் ஏறியதும் பஸ்சின் தானியங்கி கதவுகள் மூடி பஸ் புறப்பட்டது.
சிறிது தூரம் சென்றதும் பஸ்சுக்குள் நாய் சத்தம் கேட்டது. இதனால் நாய் கடித்துவிடுமோ என்று பயணிகள் அலறினர். இருக்கையை விட்டு இங்கும் அங்குமாக ஓடினர். எனினும் பின்பக்கம் ஏறிய நாய் இருக்கைகளுக்கு இடையே நகர்ந்து நகர்ந்து டிரைவரிடம் வந்து, என்ஜின்மீது ஏறி படுத்துக்கொண்டது. அதை அங்கிருந்து விரட்டியதும் டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.
தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர். உடனே தானியங்கி கதவை மூடியபடி பஸ், குடியாத்தம் நோக்கி புறப்பட்டு சென்றது. நாய் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இவ்வளவு நடந்தும் நாய் ஒருமுறைகூட குரைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.
- கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
வேலூர்:
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்து சென்றனர்.
இந்த நிலையில் துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அவர் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த துரை தயாநிதி தனது காரில் ஏறி கிளம்பி சென்றார். அவருடன் மு.க.அழகிரியும் சென்றார்.
இதனால் சி.எம்.சி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
- விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் வீட்டில் தூக்கில் தொங்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர், சலவன்பேட்டை, சேஷாலம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவரது மனைவி மாலா (60). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ. 11 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். கடனை பெற்ற நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். முருகேசன் அவரது மனைவி இருவரும் கடன் பெற்றவர் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அவர்கள் பணத்தை தருவதாக காலம் கடத்தி வந்தனர்.
பின்னர் நீங்கள் எனது தந்தையிடம் பணம் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. இதனால் நீங்கள் யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவர்களிடமே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கினர்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் முருகேசன் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் முருகேசனின் வீட்டில் சோதனை செய்த போது அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.
அதில் சலவன்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் எங்களிடம் ரூ.11 லட்சம் கடனாக வாங்கினார். அவர் இறந்து விட்டதால் அவரது மகன்களிடம் பணத்தைக் கேட்டபோது இறந்தவர்களிடமே பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத விரக்தியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.
வேலுார்:
வேலுாரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இந்த பழக்கத்துக்கு ஆளான மாணவிகள், பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.
இந்த விழாவுக்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன் சம்பந்தம்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அப்போது மாணவிகள் தெரியாமல் செய்து விட்டோம் என கூறினர்.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களுடன் ஆன்லைன் மூலம் அவசர கூட்டம் நடந்தது.
இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் புத்தகப்பைகளில் கத்தி, செல்போன் போன்று தேவையில்லாத பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும்.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றிருந்தால், அவர்களின் வகுப்பறையில் வேறு ஆசிரியர் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் ஓய்வு அறைக்கு செல்லாமல், வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.
மேலும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்கள் எடுத்து வர கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த உத்தரவுகளை இன்று முதலே பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்