search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.
    • தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் கோடை காலத்தில் தாகம் தணிப்பதற்காக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர்- மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், பழரசம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் பழக்கம், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்து இருக்கும் என நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவத்தை பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை எல்லாம் பார்க்கும் போது தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக இப்படி அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
    • கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதாலும் பரிகார பூஜைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இக்கோவில் அருகில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததினால் பக்தர்கள் தங்கள் வந்த வாகனங்களை கோவில் அருகில் உள்ள தெருக்களில் நிறுத்தி செல்வதால் அந்த பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்கு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. 

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    இதனால் விடுமுறை தினங்கள் மற்றும் கூட்டம் அதிகமாக காணப்படும் நேரங்களில் கோவில் அருகில் உள்ள தெரு இளைஞர்கள் தங்கள் தெருவுக்கு வரும் பாதைகளை அவர்களே பேரிகாட் அமைத்து தடுக்கின்றனர்.

    மேலும் ஏராளமான வாகனங்கள் தெப்பகுளத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் வரை சாலையின் இருபக்கங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
    • தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற முகவரியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

    அவர், மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டு உள்ளார்.

    அதனை நம்பிய இளைஞர் ரூ. 4 லட்சம் 88 ஆயிரத்து 159 பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்பி உள்ளார்.

    பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது31) என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று ராஜவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது.
    • புதிதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உப்பளங்கள் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக தொடங்கியது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    இதனால் தூத்துக்குடியில் உப்பு விலை திடீரென உயர்ந்து உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் புதிதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

    உப்பு விலை உயர்ந்து காணப்படுவதால், தூத்துக்குடியில் இருந்து உப்பு இறக்குமதி செய்த கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தற்போது குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளனர். இதனால், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
    • ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் படகு மூலம் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்செந்தூர் உட்கோட்டம் திருச்செந்தூர் போலீஸ் நிலைய எல்லை அருகே கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ஆலந்தலை ஊருக்கு வடக்கே கணேசபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

    அதனை ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து பீடி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த ஆலந்தலை ராஜா (வயது29), வேனை ஓட்டி வந்த டிரைவர் தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த பாலமுருகன் (35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அ.தி.மு.க. வியாபார நிறுவனமாக செயல்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சுவாமி தரிசனம் செய்து இரவு ராக்கால அபிஷேகத்திற்கு பால் வழங்கி விழாவில் கலந்து கொண்டு மூலவர் மற்றும் சண்முகரை வழிபட்டார்.

    பின்னர் சூரசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருப்ர்களிடம் கூறியதாவது:-

    கட்சியை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியுமா?. எடப்பாடி பழனிசாமி தன்னை தலைவர் என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அ.தி.மு.க. வியாபார நிறுவனமாக செயல்படுகிறது. பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி மீதான கோபத்தின் காரணமாகவும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும்தான் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள்.

    ஆனால் தி.மு.க. 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது.

    எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.வும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என்று வேலை பார்த்தனர். வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை தி.மு.க.விற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர். தி.மு.க.விற்கு எதிராகவும், துரோகத்திற்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது.

    அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் கட்சி பா.ஜ.க. அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும். வாக்கு சதவீதமும் அதிகமாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் 3-ம் இடத்திற்கு தள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, மாநில அமைப்பு செயலாளர் பி.ஆர். மனோகரன், இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் முருகேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • திருச்செந்தூர் கடற்கரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
    • கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தரிசனம் செய்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமியில் விரதம் மேற்கொண்டால் சித்ரகுப்த நாயனார் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த விரதம் மேற்கொள்பவர்கள் சித்தர்கள் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமககளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் சித்ரா பவுர்ணமியை யொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் குவிவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை முதலே ஏராளமானவர்கள் திரண்டனர். இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி அங்கே நிலாச்சோறு சாப்பிட்டு விரதம் மேற்கொண்டனர்.

    இதனால் நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. விடிய விடிய பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.

    • குடும்ப பிரச்சனை காரணமாக தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • குடிபோதையில் மகன், பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானதீபம். இவரது மனைவி குலோடில்டா (வயது 67). குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதில் மூன்றாவது மகன் ஜெயனுக்கு(38) திருமணமாகி மனைவி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெயன் அப்பகுதியில் உள்ள பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் குடிபோதையில் தாய் குலோடில்டாவிடம் அவர் தகராறு செய்துள்ளார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயன் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் மார்பு மற்றும் வயிற்று பகுதி ஆகிய 3 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் குலோடில்டா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த தூத்துக்குடி நகர போலீஸ் உதவி கமிஷனர் கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா, வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குலோடில்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தாயை கொலை செய்த ஜெயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு செய்த தந்தையை 14 வயது மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் நேற்று குடிபோதையில் மகன், பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
    • ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் மாரிச்செல்வம் வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.

    இதில் மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் மாரிச்செல்வம் பக்கத்து வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றது.

    மேலும் மாரிச்செல்வத்திற்கு சொந்தமான ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.

    இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்துக்கு தொழில் ரீதியாக ஏதேனும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த பிரச்சனையில் யாரேனும் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்துக்கு தெரிந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கி தர கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வக்கீல் மாரிச்செல்வம் அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    இதனால் வக்கீல் மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனினும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர்.
    • போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பீடி இலை பண்டல்கள், மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் காயல்பட்டினம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான கடற்கரை வழியாக போதைப்பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், காவலர்கள் இருதய ராஜகுமார், ராமர் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட கடற்கரை பகுதிக்கு சென்று கண்காணித்து வந்தனர்.

    இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர். படகு ஒன்றும் தனியாக நின்று கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.

    ஆனால் உஷாரான அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர், தன்னை தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் ரூ.5 ஆயிரம் தந்து இங்கு அழைத்து வந்ததாகவும் வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மர்ம பண்டல்களை ஆய்வு செய்தபோது, 50 மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரிந்தது.

    இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 3 பேர், படகின் உரிமையாளர் குறித்த விவரங்களை கேட்டு பிடிபட்ட அந்தோணி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • பக்தர்கள் கோவிலுக்கு வந்து காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • கோவிலில் இருந்து வாகனங்கள் பஸ் நிலையம் கடந்து வெளியே வரமுடியாமல் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், மேலும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டியும் விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் ரூ.100 தரிசன கட்டண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    மேலும் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோவிலில் இருந்து வாகனங்கள் பஸ் நிலையம் கடந்து வெளியே வரமுடியாமல் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஏராளமான பக்தர்கள் கூடியதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், பொருளாளர் ராமநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் சேகர், நிர்வாகிகள் பில்லா ஜெகன், மாமன்னன், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி


    ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் அதன் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய சீசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குழு செல்வி, சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் ரெஜூலா பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ஹெக்டேவர் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், அவரது மகன் ரகுராமன் மற்றும் பேரன் சிதம்பர ஈஸ்வர் ஆகியோருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர்கள் அழகேசன், முருகன், துணைச்செயலாளர்கள் சத்தியசீலன், பார்த்திபன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், கோடீஸ்வரன், ரமேஷ், ஆறுமுக நயினார், பட்டு, மதன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ×