என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பூர்
- பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் இ.மெயில் மூலம் பள்ளி அலுவலக இ.மெயிலுக்கு குறுந்தகவல் வந்தது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யாரென்று தெரியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வார இறுதி விடுமுறை நாட்கள் முடிந்து வழக்கம் போல் இன்று காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் இ.மெயில் மூலம் பள்ளி அலுவலக இ.மெயிலுக்கு குறுந்தகவல் வந்தது.
அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் நல்லூர் உதவி கமிஷனர் விஜய லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக பள்ளி மைதானத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பள்ளி வகுப்பறைகள், அலுவலகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர், மோப்பர் நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர். பள்ளி வாகனங்களை வெளியே நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இருப்பினும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யாரென்று தெரியவில்லை. இ.மெயில் முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர். அண்மைக்காலமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது வழக்கமாகியுள்ளது. எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடைக்கான உரிமம் முடிவடைந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- போலீசார் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அமர்ஜோதி லே அவுட் வெங்கடாசலபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இருப்பினும் அந்த கடை அகற்றப்படவில்லை.
அங்கு மது அருந்துபவர்கள் வீட்டின் முன்பு சிறுநீர் கழிப்பது, பாட்டில்களை உடைப்பது என அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே நட முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், கடைக்கான உரிமம் முடிவடைந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து நேற்றிரவு திடீரென கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் சிறிது நேரம் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய போலீசார் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- புளிய மரத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக தொங்குவதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக தொங்குவதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் சாளரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த மார்ச் மாதம் ராஜவாய்க்கால் கரையில் சாமிதுரை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
எனவே விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்தது.
- வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:- அவினாசி-24, உப்பாறு அணை-18, குண்டடம்-10, நல்லதங்காள் ஓடை அணை-20, அமராவதி அணை -20. மாவட்டம் முழுவதும் 164 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சேதமான சாலைகள் சேறும் சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- பிரதீபா, இந்திய பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளார்.
- மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீபா (வயது 42). இவருக்கு கடந்த மே மாதம் பல்வேறு எண்களிலிருந்து வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள் இந்திய பணத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறினர்.
இதைத்தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணுக்கு லிங்க் அனுப்பப்பட்டது. அதில் பயணர் ஐ.டி, கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கி பிரதீபா உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட வங்கி கணக்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நம்பிய பிரதீபா, இந்திய பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளார். அதற்கு கணிசமான லாபம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்தை பிரதீபா முதலீடு செய்துள்ளார்.
அதற்கான லாபத்துடன் பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும் 2,500 அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை செலுத்தினால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரதீபா திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதுதொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பல்லடம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
- ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
- உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமார வடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார வடிவேல் (வயது 56).
இவர் கேரள மாநிலம் தலைச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி பகுதியில் பணம் வசூல் செய்ய சென்ற போது, வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் குமார வடிவேல் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
இன்று காலை குமார வடிவேலின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் மற்றும் நில வருவாய் அலுவலர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் பிரபு, கவுசல்யா ஆகியோர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமாரவடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.
- யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது.
- வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது.
இந்தநிலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மானுப்பட்டி பிரிவு, ஈசல் தட்டு கிழக்கு சுற்று, செட்டி மொடக்கு சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது.
இது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் யானை குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) கீதா முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். யானை குட்டி மார்பக பகுதியில் ஏற்பட்ட உள்காயத்தின் காரணமாக இறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூரில் அரசியல் கட்சி கொடி தயாரிப்பில் 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
- கொடிகள் ரூ.100 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாடு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விஜய் செல்ல உள்ளதால் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் இப்போது இருந்தே அதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
குறிப்பாக அரசியல் கட்சிகள் என்றால் அதில் கொடிகள் பிரதானமாக விளங்குகிறது. எனவே கொடிகள் தயாரிக்க திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் ஆர்டர்கள் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி தயாரிப்பாளர் மகேஷ் கூறியதாவது:-
திருப்பூரில் அரசியல் கட்சி கொடி தயாரிப்பில் 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. முன்பெல்லாம் தேர்தல் சமயங்களில் மட்டுமே கொடிகள் தயாரிக்க அதிக அளவு ஆர்டர்கள் வரும். தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம், மாநாடு என நடத்துவதால் முன்பை விட கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் அதிக அளவு வருகின்றன.
தற்போது நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் தயாரிப்புக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மட்டும் தயாரிக்க ஆர்டர்கள் வருகிறது.
மாநாடு நடத்தி உள்ள நிலையில் அடுத்து பொதுக்கூட்டம், நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. இதனால் அப்போது அதிக அளவு கொடிகள் தேவைப்படும். எனவே ஒரு சில நிர்வாகிகள் கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.
மாநாட்டின் போது துண்டுகள், காரில் முன்பு கட்டப்படும் கொடிகள் அதிக அளவு விற்பனையானது. துண்டுகள் அதிக அளவு விற்பனையாகி வருகிறது. காரின் முன்பு கட்டப்படும் கொடிகள் ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. எல்.இ.டி. பொருத்தப்பட்டுள்ள கொடிகள் ரூ.2000, ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரும்பாலான நிர்வாகிகள் கொடி கம்பத்தில் ஏற்றவும், கைகளில் பிடித்து செல்லக்கூடிய வகையிலான கொடிகள் தயாரிக்க தொடர்ந்து ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த வகை கொடிகள் ரூ.100 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சட்டையில் அணியக்கூடிய பேட்ஜ்கள் அதிக அளவு விற்பனை ஆகிறது. மொத்தமாக இல்லாமல் சில்லரையில் அதிகம் விற்பனை ஆகிறது. எங்கள் நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்களை சிறிய உற்பத்தியாளர்களுக்கு பிரித்து கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரை சேர்ந்த பிரபல வேட்டி தயாரிப்பு நிறுவனத்தினர் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளின் கரைவேட்டிகள் தயாரித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். ஆர்டர்கள் கொடுத்தால் தயாரித்து கொடுக்கிறோம்.
தற்போது விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கரை போட்ட வேட்டிகள் தயாரித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. விஜய் கட்சி நிர்வாகிகள் கடைகளிலேயே வாங்கி கொள்கின்றனர். விற்பனைக்கு தகுந்தாற்போல் தயாரித்து அனுப்புகிறோம். அடுத்து விஜய் பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.
- டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
- டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.
திருப்பூர்:
டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகி உள்ளதால் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2-வது முறையாக மீண்டும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
டிரம்ப்பின் சீன எதிர்ப்பு கொள்கை, நம் பிரதமருடன் அவர் கொண்டுள்ள நட்பு , பைடன் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள வரியில்லாத வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை உயிர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளிட்ட காரணங்கள் திருப்பூர் பின்னலாடைத்துறைக்கும் சாதகமானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பின்னலாடை துறை ஆலோசகர் சபரி கிரீஷ் கூறியதாவது:-
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை விட, குடியரசு கட்சி ஆட்சி அமையும்போது அண்டை நாடுகளுடன் இணக்கமான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போர் நின்றால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெறும். ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெறும்.
சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் டிரம்ப். ஏற்கனவே இவரது பதவி காலத்தில்தான், சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஜோ பைடன் ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை டிரம்ப்பின் வருகையால் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
டாலருக்கு மாற்றாக பொதுவான கரன்சியை கொண்டு வர இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதனால் டாலர் ஸ்திரத்தன்மை இழப்பதை டிரம்ப் விரும்பமாட்டார். இந்தியாவில் சில அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க அழுத்தம் கொடுப்பார். இது போன்ற ஒரு சில பாதகங்களும் உள்ளன.
சாதக, பாதகங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் டிரம்ப்பின் வெற்றி இந்தியாவுக்கு நன்மை தருவதாகவே அமையும். நம் நாட்டுடன் குறிப்பாக பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு கொண்டுள்ளார். அதனால் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு பாதகமான அம்சங்கள் விலகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10-க்கும் மேற்பட்ட பறவைகளை சுட்டு வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது.
- திருப்பூர் மத்திய போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் எஸ்.ஆர். நகர் பின்புறம் உள்ள தனியார் கார்டன் பகுதியில் நேற்று மாலை நவீன துப்பாக்கியுடன் இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் மரத்தில் அமர்ந்திருந்த பறவையை சுட்டு வேட்டையாடினர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் எதுவும் தெரிவிக்காமல் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த நபர்கள் அவர்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அதில் 3 பேரும் வேட்டையாட வந்திருப்பதும், உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் காலியான நிலப்பரப்பு உள்ள இந்த பகுதியில் ஏராளமான பறவைகள் இரை தேடி வந்து செல்லும் நிலையில் அவர்கள் எஸ்.ஆர். நகர் பகுதியை தேர்ந்தெடுத்து வந்து வேட்டையாடி இருப்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி சமயத்தில் இதே போல இவர்கள் அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பறவைகளை சுட்டு வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்ததா? அல்லது லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியா? என எதுவும் தெரியாத நிலையில் ஸ்கோப் வைக்கப்பட்ட நீண்ட தூர இலக்குகளை குறிவைக்கும் துப்பாக்கி வைத்திருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் கரும்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறுகையில், கருப்பசாமி வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கிக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை. இருந்த போதிலும் அவர் பறவைகளை வேட்டையாடியதாலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
- திருப்பூரில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகிறது மீதமுள்ள பால் கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருப்பூரில் 50ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் விரைவில் பன்னீர் பேக்டரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தான் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் தான் பால் விலையை இன்னும் உயர்த்தாமல் ரூ.40க்கு வழங்கி வருகிறோம். ஏழை எளிய மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்