search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அதிநவீன துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது
    X

    திருப்பூரில் அதிநவீன துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

    • 10-க்கும் மேற்பட்ட பறவைகளை சுட்டு வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது.
    • திருப்பூர் மத்திய போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரம் எஸ்.ஆர். நகர் பின்புறம் உள்ள தனியார் கார்டன் பகுதியில் நேற்று மாலை நவீன துப்பாக்கியுடன் இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் மரத்தில் அமர்ந்திருந்த பறவையை சுட்டு வேட்டையாடினர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் எதுவும் தெரிவிக்காமல் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

    அப்போது அங்கிருந்த நபர்கள் அவர்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அதில் 3 பேரும் வேட்டையாட வந்திருப்பதும், உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் காலியான நிலப்பரப்பு உள்ள இந்த பகுதியில் ஏராளமான பறவைகள் இரை தேடி வந்து செல்லும் நிலையில் அவர்கள் எஸ்.ஆர். நகர் பகுதியை தேர்ந்தெடுத்து வந்து வேட்டையாடி இருப்பது தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி சமயத்தில் இதே போல இவர்கள் அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பறவைகளை சுட்டு வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்ததா? அல்லது லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியா? என எதுவும் தெரியாத நிலையில் ஸ்கோப் வைக்கப்பட்ட நீண்ட தூர இலக்குகளை குறிவைக்கும் துப்பாக்கி வைத்திருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் கரும்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறுகையில், கருப்பசாமி வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கிக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை. இருந்த போதிலும் அவர் பறவைகளை வேட்டையாடியதாலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

    Next Story
    ×