search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலையில் அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகள்
    X

    திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலையில் அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகள்

    • தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிக்கு தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    வார விடுமுறை என்பதால் ஏராளமானோர் மேகமலை அருவியில் உற்சாகமாக குளித்துக் கொண்டு இருந்தனர். நேற்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் திடீரென கன மழை பெய்ததால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனை கண்காணித்த வனத்துறையினர் உடனடியாக அருவி பகுதிக்கு சென்று அங்கு குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அவசர அவசரமாக வெளியேற்றினர்.

    இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அருவி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    நீர் வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 59.28 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 1349 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 3199 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    3472 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக உள்ளது. 763 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3242 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. 77 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 64.34 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 46, அரண்மனைபுதூர் 8, வீரபாண்டி 8.4, பெரியகுளம் 4, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 12.2, போடி 0.4, உத்தமபாளையம் 4.4, கூடலூர் 2, பெரியாறு அணை 0.4, தேக்கடி 7.2, சண்முகாநதி 5.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×