search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooperative union election"

    திருச்சியில் ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் 19 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் நேற்று தொடங்கி 10 கட்டங்களாக தெற்கு ரெயில்வே முழுவதும் நடக்கிறது. தேர்தல் பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் பொன்மலை ரெயில்வே பணிமனை உள்பட 42 இடங்களில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ரெயில்வே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ரெயில்வே ஊழியர்கள் வாக்களித்தனர்.

    வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடந்த மையங்கள் முன்பு மாநகர போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுத்தேர்தல்களை போல ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதேபோல் சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும். வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு முடிவடைகிறது. வருகிற 10-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 
    கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டு சீட்டை கிழித்து வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கூட்டுறவு சங்கத்துக்கு நேற்று தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    தேர்தல் அலுவலர் கதிர்வேல் மேற்பார்வையில் ஓட்டுப்பதிவு தொடங்க இருந்தபோது திருமோகூரை சேர்ந்த ரமேஷ், புதூர் தாமரைப்பட்டியை சேர்ந்த போஸ், மகாராஜன் ஆகிய 3 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்டனர்.

    தேர்தல் அதிகாரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன் அங்கிருந்த ஓட்டு சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர்.

    இதுகுறித்து கதிர்வேல் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து ரமேஷ், போஸ், மகாராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju
    சென்னை:

    கூட்டுறவுத்துறை ஆய்வுக் கூட்டம் சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவுத்துறையினர் மாவட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்க்கடன், உரம் வினியோகம், ஆதிதிராவிட, பழங்குடி மக்களுக்கு அரசின் உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    கூட்டுறவு சங்கம் அ.தி.மு.க. அரசால் உரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு அரசியல் இல்லை. இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த முறைதான் சக்கரபாணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதுவும் கூற முடியாது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை.


    18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைவது பற்றி முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார். அதனால் நான் எதையும் கூற விரும்பவில்லை. கூட்டுறவு அச்சகங்களில் பழைய மிஷின்கள் இருக்கிறது. அதனை மாற்றி நவீன ரக மிஷின்கள் வாங்கி வருகிறோம்.

    அ.தி.மு.க. வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 21 சதவீத சம்பள உயர்வு வழங்கியது. இது ஊழியர்களுக்கு தெரியும். 5 ஆண்டு முடிவுற்று இருக்கிறது. சம்பள உயர்வு குறித்து முதல்வரே அறிவிப்பார். மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் இந்த அரசு எடுக்காது.

    நடப்பாண்டில் 8 ஆயிரம் கேடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.102.79 கோடிக்கு காய்கறிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 281 அம்மா மருந்தகம் மூலம் ரூ.700 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவிரைவில் 61,851 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #SellurRaju
    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #HighCourt #TamilnaduGovernment #CooperativeUnionElection
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

    சென்னை புதுப்பேட்டை கூட்டுறவு சங்கம், சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், தேர்தலின்போது, போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து, பலர் கள்ள ஓட்டு போட்டதாகவும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இல்லாதவர்களை கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று காலையில் விசாரித்தார்.

    பின்னர், ‘கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தினமும் தொடரப்படுகின்றன. ஏராளமாக முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றன. எனவே, இந்த வழக்குகளின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    இதன்படி, பிற்பகலில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்தபோது, ஆணையர் ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் வாசுகி ஆஜரானார்.

    அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘கூட்டுறவு தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. விதிகளை மீறி செயல்படவில்லை. விண்ணப்பங்கள் எல்லாம் தேர்தல் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.

    மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழை, எளிய மக்களுக்காக இந்த கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

    ஆனால், அப்படிப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அழியும் நிலையில் உள்ளது. இது வேதனை அளிக்கிறது. அழியும் நிலையில் உள்ள இந்த சங்கங்களை மேம்படுத்தவேண்டும். அதற்காக அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். சரியான முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

    ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலில் பல முறைகேடுகள் நடக்கிறது. சில தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். விதிகளை மீறி, சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் என்று மனுதாரர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

    எனவே, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தேர்தல் அதிகாரிகள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின் படியும், கிரிமினல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையில் இருந்து தவறும்போது, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

    எனவே, கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் ஆணையத்திடம் புதிய புகாரை உடனே கொடுக்கவேண்டும். அந்த புகாரை பெற்றுக்கொண்ட பின்னர், தேர்தல் ஆணையம் வெளிப்படையான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால், புகார் கொடுத்தவரை நேரில் அழைத்து விசாரிக்கலாம். இதன்பின்னர், அந்த புகார் மனு மீது 8 வாரத்துக்குள் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

    முடிவு எடுக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் முடிவை வெளியிடலாம். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளாலும், தேர்தல் முடிவு வெளியிட்டதாலும், யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம், பிரிவு 90(1)ன் கீழ் தமிழக அரசிடம் புகார் மனு கொடுத்து முறையிடலாம்.

    இந்த புகார் மனுவை 6 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.  #CooperativeUnionElection #HighCourt #Tamilnews 
    ×