search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delta district rain"

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் மழை பெய்தது. சுமார் 40 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்தது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், பேரளம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சென்றது.

    நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், தலைஞாயிறு, மணல்மேடு ஆகிய இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது.

    வேதாரண்யத்தில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள நேரசி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.

    தற்போது காவிரி , வெண்ணாறு, கொள்ளிடத்தில் தண்ணீர் சென்றாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு இன்னும் செல்லவில்லை. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெய்த மழையால் பாசனத்துக்கு தண்ணீருக்காக ஏங்கி நின்ற கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்தால் நல்லது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    முள்ளியாறு - 37.4, கோரையாறு - 32.4, மன்னார்குடி - 29.6, வேதாரண்யம் - 28.4, மஞ்சலாறு - 24.6, தலைஞாயிறு - 21.8, சீர்காழி - 17.2, ஒரத்தநாடு - 15.4, திருவாரூர் - 14.4, வலங்கைமான் - 7.4, நாகை - 4.3.


    ×