search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstration Canceled"

    • போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்‌.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இதற்காக மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகில் மேடை அமைக்கப்பட்டது. அந்த சாலையில் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர்.

    இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையிலான நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தொடர்பாக ஏற்கனவே மனு அளித்து விட்டோம். இதனை தொடர்ந்து மேடை, பேனர் மற்றும் கொடி வைக்கப்பட்டுள்ளது. எதற்காக திடீரென்று நள்ளிரவில் மேடை, பேனர் ஆகியவற்றை அகற்ற வந்துள்ளீர்கள்? என போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதால் மேடையை அகற்றுகிறோம் என கூறிய போலீசார், மேடையை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி கொள்ளவும் என அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க. கொடிகளை அகற்ற முயன்ற போது, அ.தி.மு.க. நிர்வாகிகள் தாமாக முன்வந்து 300-க்கும் மேற்பட்ட கொடிகளை அகற்றினார்கள்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, நள்ளிரவில் மேடை, கொடிகள், பேனர்களை அகற்றிய சம்பவம் கடலூர் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×