search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees fear"

    திருப்பதி மலைப்பாதையில் 7-வது மைல் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியது. அதனை பார்த்து பக்தர்கள் பீதியடைந்தனர். #Tirupati
    திருமலை:

    அலிபிரி நடைப்பாதையில் தினமும் ஏராளமான திவ்ய தரிசன பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் 7-வது மைல் என்ற இடத்தில் ஆஞ்சநேயர் சிலை அருகில் சுரங்கப்பாதை உள்ளது.

    அதன் அருகில் 3 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் பலர் அமர்ந்திருந்தனர். சுரங்கப்பாதை ஓரம் ஒரு மரத்தின் கீழே சிறுத்தைப்புலி ஒன்று அமர்ந்திருந்ததைப் பக்தர்கள் பார்த்துப் பீதியடைந்தனர்.

    இதுபற்றி பக்தர்கள், திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தைப்புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்தச் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அந்தத் தகவலை கேள்விப்பட்ட பக்தர்கள் பீதியடைந்தனர். சிறுத்தைப்புலியை பிடிக்க 7-வது மைல் பகுதியில் கூண்டு வைக்கப்பட உள்ளது.

    திருமலையை அடுத்த பாலாஜிநகர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை வேட்டையாடவும், அப்பகுதியில் வீசப்படும் உணவு பொருட்களை சாப்பிடவும் சிறுத்தைப்புலிகள் நடமாடுகிறது.

    3 நாட்களுக்கு முன்பு 7-வது மைல் பகுதியில் நடமாடிய அதே சிறுத்தைப்புலி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாகனங்கள் செல்லும் திருமலை-திருப்பதி முதலாவது மலைப்பாதையில் உள்ள 52-வது வளைவுப் பகுதியில் நடமாடியது. அதனை வனத்துறை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

    திருப்பதி-திருமலை மற்றும் திருமலை-திருப்பதி ஆகிய இரு மலைப்பாதைகளில் நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை வாகனப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில் அலிபிரி டோல்கேட்டும் மூடப்படுகிறது. மக்கள், பக்தர்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இல்லாத நேரத்தில் வனப்பகுதியில் உள்ள சிறுத்தைப்புலிகள், மான், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வருகின்றன.

    இரு மலைப்பாதைகளில் வாகனப் போக்குவரத்தை தடை செய்யும் நேரமான நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை என இருப்பதை மறு பரிசீலனை செய்து, அந்த நேரத்தை மாற்றி அமைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். வாகன போக்குவரத்துச் சத்தத்தைக் கேட்டால் வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியே வராது என வனத்துறையினர் தெரிவித்தனர். #Tirupati
    ×