search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul Gandhi market"

    • வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.
    • இதனைதொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் தாங்கள் காய்கறிகளை இறக்க மாட்டோம் எனக்கூறி வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்திமார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் கொடைக்கானல் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் இங்கு தினந்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு அதிகாலை முதல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்காக 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நகர்பகுதியில் உள்ள சில்லரை வியாபாரக்கடைகளுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக வந்து காய்கறிகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.

    இதனைதொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் தாங்கள் காய்கறிகளை இறக்க மாட்டோம் எனக்கூறி வேலை நிறுத்தபோராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். இதனால் இன்று பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவரவில்லை.

    கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளும் வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காந்திமார்க்கெட் ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. காய்கறிகள் விற்பனையாகாததால் இன்று மட்டும் ரூபாய் பல லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளிைடயே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சமரசம் ஏற்படாவிட்டால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • காந்தி மார்க்கெட்டில் 30 ஆண்டுகளாகியும் எந்த வசதியும் செய்யவில்லை. சிறு மழை பெய்தால் கூட மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடும்.
    • திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் பார்க்கிங் வசதி, குப்பை தொட்டி, தண்ணீர் வசதி ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 1990ம் ஆண்டு காந்தி காய்கறி மார்க்கெட் தொடங்கப்பட்டது. 300 கடைகளுடன் செயல்பட்டு வந்த இந்த மார்க்கெட்டில் 30 ஆண்டுகளாகியும் எந்த வசதியும் செய்யவில்லை. சிறு மழை பெய்தால் கூட மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடும். இதன் நடுவேதான் காய்கறிகள் விற்பனை நடக்கும். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

    திண்டுக்கல் மாநகராட்சியாக கடந்த 2014ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட பின் 8 ஆண்டுகள் கடந்த பின்னும் எந்த வித அடிப்படை வசதிகள் இன்றி சுகாதார சீர்கேட்டில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால் மார்க்கெட்டை சீரமைக்க மாநகராட்சி முன்வந்தது. தொடர்ந்து புதிய கடைகள் கட்டப்பட்டன.

    இதில் 128 கமிஷன் கடைகள் மற்றும் 115 சில்லறை விற்பனை கடைகள் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நாள் தோறும் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    திண்டுக்கல் நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வாகன நிறுத்த வசதி இல்லை. இதனால் சாலை ஓரங்களில் கிடைக்கும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாக உள்ளது.

    இந்த மார்க்கெட் சுற்றி கோவில்கள், அரசு பள்ளிகள், பொழுது போக்கு இடங்கள் அமைந்துள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் காலை வேளையில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்களின் வாகனங்களை கூட நிறுத்த வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குப்பை தொட்டி இல்லாத மார்க்கெட்டாக இருந்து வருகிறது. காய்கறி கழிவுகளை சாலை ஓரங்களில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வாகன நிறுத்த வசதி, தண்ணீர் வசதி, குப்பை தொட்டி வசதிகள் இல்லாமல் மக்கள் முகம் சுழிக்கும் மார்க்கெட்டாக காந்தி மார்க்கெட் இருந்து வருகிறது. பார்க்கிங் வசதி இல்லாததால் மார்க்கெட்டிற்கு வெளியே சாலையோர கடைகளில் மக்கள் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் மார்க்கெட்டின் உள்ளே வாடகை செலுத்தி கடை வைத்துள்ள சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இதனால் இவர்களும் சாலை ஓரத்தில் கடைகளை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக இருந்து வருகிறது. கோட்டை குளம் சாலை, தாலுகா அலுவலக சாலை, மேற்கு ரத வீதி ஆகிய பகுதிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

    இந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்லும் போது நெரிசலில் சிக்கும் நிலையும் நீடிக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் பார்க்கிங் வசதி, குப்பை தொட்டி, தண்ணீர் வசதி ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு கமிஷன் கடைக்காரர்களால் வாங்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். 

    கடந்த சில வாரங்களாக கத்தரிக்காய் விளைச்சல் குறைந்ததால் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. தற்போது பச்சை கத்தரிக்காய் மற்றும் வைலட் கத்தரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. 

    வைகாசி மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் மற்றும் கோவில் விழாக்கள் அதிக அளவில் நடந்து வருவதால் சமையலுக்கு முக்கியம் வாய்ந்த காயாக கத்தரிக்காய் உள்ளது. இதனால் விலை குறைவு காரணமாக விற்பனையும் அதிகரித்துள்ளது. இதேபோல வீடுகளிலும் கத்தரிக்காய்களை மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
    ×