search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "entered"

    மயக்க ஊசி செலுத்தி டாப்சிலிப்பில் விடப்பட்ட ‘சின்னதம்பி’ யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது. யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். #ChinnathambiElephant
    பொள்ளாச்சி:

    கோவை சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையனூர், தாளியூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், ரேசன் கடை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

    விவசாயிகளின் புகாரையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 கும்கிகள் உதவியுடன் விநாயகன் என்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சின்னத்தம்பி யானை தப்பியது.

    மயக்க ஊசியில் இருந்து தப்பிய ‘சின்னத்தம்பி’ யானை பன்னிமடை, சி.ஆர்.பி.எப் கேம், கதிர்நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றி பயிர்களை சேதப்படுத்தி வந்தது.



    சின்னத்தம்பி யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து சலிம், தெப்பக்காடு முதுமலை முகாமில் இருந்து முதுமலை என்ற கும்கிகளும் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்த விஜய், சேரன் ஆகிய கும்கிகள் உதவியுடன் கோவை ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், விரைவு காப்பாட்டு குழுவினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 50 பேர் விடிய, விடிய போராடி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி கடந்த 25-ந்தேதி சின்னதம்பி யானையை பிடித்தனர்.

    3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் சின்னத்தம்பி யானையை கும்கிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றினர். லாரியில் யானையை ஏற்றும்போது அதன் தந்தங்கள் முறிந்தன. கும்கிகள் குத்தியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. லாரியில் கொண்டு செல்லப்பட்ட சின்னதம்பி யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை டாப்சிலிப் பகுதிக்கு அன்று இரவே கொண்டு செல்லப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னர் டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டது.

    ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டது. 26-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்பட்டதில் விடப்பட்ட வரகளியாறு பகுதியிலேயே தண்ணீர், உணவு அருந்தி அந்த பகுதிலேயே தூங்கியது தெரியவந்தது. நேற்று முதல் சின்னத்தம்பி யானை மெதுவாக நடந்து ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊரை நோக்கி வந்தது. இந்த ஊர் ஆழியாறில் இருந்து 9 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

    சின்னதம்பி யானை இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இன்று காலை 6 மணியளவில் ரோட்டில் நடந்து வந்தது. யானை புகுந்த தகவல் தெரியாத சிலர் வழக்கம்போல் வெளியில் நடமாடினார்கள். யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். கம்பீரமாக அதே சமயம் தந்தங்கள் முறிந்த நிலையில் சுற்றிய யானை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னத்தம்பி என்ற யானை என்பதை அறிந்தனர்.

    சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது அது சின்னதம்பி யானைதான் என்பதை உறுதிப்படுத்தினர். காட்டுயானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இதேபோன்று ஊருக்குள் நுழைந்துகொண்டே இருந்தால் அதனை வளர்ப்பு யானையாக முகாமில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். #ChinnathambiElephant
    சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த 36 வயது இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple #KeralaWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் இளம்பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் புதுயுக கேரளம் என்ற முகநூல் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் உதவியுடன் சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு சார்பில் முகநூலில், ‘கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு(வயது 36) கடந்த 8-ந் தேதி காலை 7.30 மணியளவில் இருமுடி கட்டுடன் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று நெய்யாபிஷேகம் உள்பட பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து மஞ்சு கூறும்போது, ‘நான் கடந்த 8-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தேன். சபரிமலை செல்வதற்கு போலீசில் அனுமதி எதுவும் பெறவில்லை. ஆதலால் போலீசாரின் பாதுகாப்பு எதுவும் இன்றி, பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். சாமி தரிசனம் செய்ய எனக்கு எந்த வித இடையூறும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ காட்சி விரைவில் வெளியிடப்படும்’ என்றார். ஆனால் இந்த தகவலை கேரள அரசோ, போலீஸ் துறையோ உறுதி செய்யவில்லை.  #SabarimalaTemple #KeralaWomen
    விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் போலீஸ் குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. அங்கு ஏராளமானவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இன்று காலை அங்குள்ள ஒரு வீட்டில் நல்லபாம்பு திடீரென்று புகுந்தது. வீட்டில் உஷ்... உஷ்.... என சத்தம் வருவதை கேட்டு அங்கிருந்தவர்கள் என்ன சத்தம்? என்று தேடினர்.

    அப்போது அங்கு ஒரு நல்லபாம்பு இருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து, பாம்பு... பாம்பு.... என கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

    அதற்குள் அந்த பாம்பு மீட்டர் பெட்டிக்குள் புகுந்து விட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜெய்கணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் மீட்டர் பெட்டிக்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டனர். அதன் பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    பாம்பு பிடிபட்டதால் குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    ×