search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extension of Prohibition"

    • அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

    ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

    எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணையானது உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    பல தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இது தனியார் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என அரசு தரப்பு கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அரசின் முடிவு குறித்து அறிந்தபின் நிரந்தர தீர்வு காணலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தொழிலாளர்களை தோட்டத்திலிருந்து காலி செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×