search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake lottery ticket"

    டி.என்.பாளையம் அருகே கம்ப்யூட்டரில் அச்சிட்ட போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

    டிஎன்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி. புதூர் நால்ரோடு குள்ளநாய்க்கனூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் என்கிற பழனிச்சாமி (வயது 42).

    இவர் கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட போலி லாட்டரி சீட்டுகளை டி.என்.பாளையத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பரிசு விழும் என்று ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் சட்ட விரோதமாகவும், ரகசியமாகவும் விற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கள்ளிப்பட்டி போஸ் வீதியை சேர்ந்த தவசியப்பன் (49), என்பவர் மகேந்திரனிடம் போலி லாட்டரி சீட்டு என்று அறியாமல் லாட்டரி வாங்கி வந்ததாக தெரிகிறது.

    நேற்று மாலை டி.ஜி. புதூரில், காளியூர் பிரிவு தம்பாக்கவுண்டர் ஓட்டல் அருகே தவசியப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை, மகேந்திரன் போலி லாட்டரி சீட்டுகளை வாங்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.

    ஆனால் தவசியப்பன் லாட்டரி வாங்க மறுத்தார். மேலும் போலீசிடம் சொல்லி விடுவேன் என்று தவசியப்பன் சொன்னதாக தெரிகிறது.

    இதனால் மகேந்திரன் ஆத்திரம் அடைந்து தவசியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் தவசியப்பன் வைத்திருந்த ரூ.200 பறித்துக் கொண்டு, 5 போலி லாட்டரி சீட்டுகளை கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து பங்களா புதூர் போலீஸ் நிலையத்தில் தவசியப்பன் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரன் என்கிற பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

    கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட போலி லாட்டரி சீட்டுகள் எங்கு அச்சிடப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது? யாரெல்லாம் இந்த போலி லாட்டரி மோசடி விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர்? என விசாரணைக்கு பின் தெரியவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    ×