search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financial Irregularities"

    • அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.
    • ஜூன் 27-ந்தேதி செபி நோட்டீஸ் அனுப்பியது.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. ரூ. 10 லட்சம் கோடி வரை பங்கு சந்தையில் அதானி குழுமம் இழப்பை சந்தித்தது. இந்த குற்றச் சாட்டை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்தது.

    ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹிண்டன் பர்க் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், விரைவில் இந்தியாவில் மிகப்பெரிய சம்பவம் இருக்கு என்று பதிவிட்டது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் புதிய குற்றச்சாட்டுகளை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் தான் அறிவித்தப்படி, புதிய குற்றச்சாட்டை வெளியிட்டது. இதில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவரான தலைவர் மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாக தெரிவித்தது. இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டது. ஆனால் அந்த குழுமத்துக்கு எதிராக எந்த பொது நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. தங்கள் நிறுவனங்கள் மீது செபி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது என்ற ரீதியிலேயே அதானி குழும நிர்வாகத்தினர் பதில் அளித்தனர்.

    இதற்கு செபியின் தலைவரான மாதபி புச்சுடன் அதானி குழுமத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்.

    அதன்படி மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.

    செபி உறுப்பினர் மாதபி புரி புச், தவால் புச்சு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி சிங்கப்பூரில் உள்ள ஐபிஇ பிளஸ் பண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச்சு தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாதபி புச்சு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபியின் முழுநேர உறுப் பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு 2017-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி, அவரது கணவர் தவால் புச்சு, மொரிஷஸில் உள்ள நிதி நிர்வாக நிறுவனமான டிரைடென்ட் டிரஸ்ட்டுக்கு எழுதிய கடிதத்தில், தனது மற்றும் மனைவியின் ஜாயின்ட் கணக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இதன் மூலம் அந்த கணக்கு, தவால் புச்சுவின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது. அதன்பின் 2018-ம் ஆண்டு வெளியிட்ட கணக்கு விவரத்தில் புச்சு தம்பதியின் இந்த பண்டில் இருக்கும் பங்கின் மதிப்பு 872,762.25 டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பின்னர், 2018 பிப்ரவரி 25-ந் தேதி, மாதபி புச்சு செபி-யின் முழுநேர உறுப்பினராக இருந்தபோது, தனது கணவரின் பெயரில் வணிகம் செய்து, தனது தனிப்பட்ட இ-மெயில் மூலம் இந்திய இன்போலைன் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், பண்டில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும்படி கோரியுள்ளார். தான் செபியின் தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு தனது பெயரில் உள்ள பங்குகளை கணவர் பெயருக்கு மாதபி புரி புச் மாற்றியுள்ளார்.

    இவர்கள் அதானியின் பங்குகளில் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அதானி மீது செபி நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு அதன் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம்.

    அதானி குழுமத்தின் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் செபி தோல்வி அடைந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    செபி உண்மையாகவே வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கண்டறிய விரும்பியிருந் தால், அதன் தலைவர்தான் தன்னை முதலில் முன் நிறுத்த வேண்டும். இதனால் அதானி விவகாரத்தில் செபியின் மந்தமான செயல்பாடுகள் ஆச்சரிய மளிக்கவில்லை.

    அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஜூன் 27-ந்தேதி செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் நாங்கள் இன்னும் வலுவான வெளிப் பாட்டை வழங்கியிருக்க வேண்டும் என்று கூறியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
    • பொறுப்பு முதல்வரான நாள் முதல் ஊழல், முறைகேடு என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பு முதல்வரான நாள் முதல் ஊழல், முறைகேடு என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

    முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்குவதாகக் கூறி பல்கலைக்கூட பேராசி ரியர்கள், ஊழியர்கள் சம்பளப் பணம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்தை விதிகளை மீறி எடுத்துச் செலவழித்துள்ளார். இவருக்கு ரூ.9 ஆயிரத்து 999 மட்டுமே நிதியைக் கையாள வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார்.

    இது விதிமீறல் மட்டுமல்ல கிரிமினல் குற்றமாகும். இதனால், இவருக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது தலைமைச் செயலர் தலைமையில் இயங்கும் ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இப்புகார் மீது கடந்த மே 18-ந் தேதி சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு ஒரு மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்க ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இதுநாள் வரையில் தலைமைச் செயலர் தலைமையிலான ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளும், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    பொறுப்பு முதல்வர் விதிகளை மீறி தகுதி இல்லாத 8 தற்காலிக உதவிப் பேராசிரியர்களைப் பணியமர்த்தி உள்ளார். எனவே, பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை பதவி நீக்கவும், 8 உதவி பேராசிரியர்களைப் பணி நீக்கவும் நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, வருகிற 4-ந் தேதி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நிதி முறைகேடு புகார் தொடர்பாக உள்துறை அனுமதி பெற்று கவர்னர் மீது விசாரணை நடத்தப்படும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #Governor
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக பங்களிப்பு நிதிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து தொழிற்சாலைகளிடம் வசூல் செய்யப்பட்டதாக நான் குற்றம்சாட்டியிருந்தேன். அதற்கு கவர்னர் நாங்கள் யாரிடம் இருந்தும் சமூக பங்களிப்பு நிதி வசூலிக்கவில்லை. யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

    கவர்னருக்கான பணிகள் என்ன என்று அரசியலமைப்பு சட்டத்திலும், யூனியன் பிரதேச சட்டத்திலும் கூறப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம், பணிகள் என்ன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புதுவை அரசு சார்பில் தொழிற்சாலைகளிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தலைவராக முதல்-அமைச்சர் உள்ளார். உறுப்பினர்களாக தலைமை செயலாளர், தொழிலாளர் துறை அதிகாரி, 4 அரசு செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். சமூக பங்களிப்பு நிதி வழங்க வேண்டும் என விரும்பினால் இந்த குழுவிடம்தான் வழங்க வேண்டும்.

    இந்த குழு நிதியை காசோலையாகவோ, டிராப்ட்டாகவோ, பணமாகவோ பெற்றுக்கொண்டு அதற்கான அத்தாட்சி ரசீதை வழங்கும். இந்த குழுவே அந்த நிதியின் கீழ் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும். திட்டம் முறையாக நிறைவேற்றப்படுகிறதா? என கண்காணிப்பும் செய்யும். இதுதான் சமூக பங்களிப்பு நிதி பெறுவதற்கும், செயல் படுத்துவதற்குமான நடைமுறைகளாகும்.

    ஆனால் கவர்னர் எனது கவனத்திற்கு வராமலேயே கடந்த 24.9.2018 அன்று தொழிற்சாலைகளிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கவர்னர் மாளிகை அதிகாரி ஆஷாகுப்தா, குறைதீர்ப்பு அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் போன்மூலம் பல தொழிலதிபர்களை, தொழிற்சாலைகளை தொடர்புகொண்டு பணம் கேட்டுள்ளனர். இதன்மூலம் சில திட்டங்களை நேரடியாக செயல்படுத்தியுள்ளனர். இதற்கு கவர்னர் மாளிகையே ஒப்பந்ததாரர்களுடன் இணைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கவர்னர் தான் பணம் எதுவும் பெறவில்லை என உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் பாகூரில் ஒரு திட்டத்திற்கு ரூ. ஒரு கோடி வசூலாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரூ.80 லட்சம் மட்டுமே வசூலாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    சமூக பங்களிப்பு நிதியை பெற கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒருவர் சமூக பங்களிப்புக்கு நிதி அளித்தால் அவர் வரி கட்டியுள்ளாரா? குற்ற பின்னணி உடையவரா? என்பதை ஆராய்ந்துதான் நிதி பெறுகிறோம். இன்னும் சிலர் அரசிடம் சலுகை பெற இத்தகைய நிதியை தருவார்கள். இதையும் ஆராய்ந்தே நிதி பெற வேண்டும்.

    யார் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வது நடைமுறைக்கு முரண்பாடானது.

    அரசு கொறடா தொகுதியில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி கவர்னர் மாளிகை பெற்றுள்ளது. இதுபோல எங்கு, எவ்வளவு நிதி பெறப்பட்டது என கவர்னர் மாளிகை தெரிவிக்க வேண்டும். அவர்கள் இதை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் என நம்புகிறோம்.



    புதுவையின் நீர் ஆதாரத்தை பெருக்கியுள்ளதாக கவர்னர் கூறியுள்ளார். என் மீது முதல்-அமைச்சருக்கு பொறாமை என்றும் கூறியுள்ளார். அவர் மீது நான் பொறாமைப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுவரை ரூ.85 லட்சம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளது. யாரிடம், எங்கு பெற்றார்கள் என தெரிவிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? யாருக்கு டெண்டர் கொடுத்தீர்கள்? என தெரிவிக்க வேண்டும்.

    புதுவை அரசின் பொதுப்பணித்துறை ஒரே ஒரு பணியை செய்தததாக தெரிவித்துள்ளனர். மற்ற பணிகளுக்கும், பொதுப் பணித்துறைக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக உணவு வழங்க கவர்னர் மாளிகையில் இருந்து போன் செல்கிறது. இதுபோல 100 பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்க 3 ஓட்டல்களுக்கு கவர்னர் மாளிகை உத்தரவு சென்றுள்ளது. ஒரு ஓட்டல் 100 பேருக்கு சாப்பாடு கொடுத்து விட்டனர். மீதமுள்ள 2 ஓட்டல்களில் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

    இதுபோல கவர்னர் மாளிகை பண வசூல் செய்யும் மையமாக மாறியுள்ளது. கவர்னர் மீது தன்னிச்சையாக எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று கவர்னர் மீது விசாரணை நடத்தவுள்ளோம். இதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு நான் கடிதம் அனுப்ப உள்ளேன்.

    ஓய்வுபெற்ற அதிகாரி தேவநீதிதாசை தன் ஆலோசகராக நியமிக்க உள்துறைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் உள்துறை அமைச்சகம் கன்சல்டன்சியாக நியமிக்க கூறியது. இதை மீறி சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாசை பணி நியமனம் செய்துள்ளார். இதற்கு மத்திய உள்துறை எந்த அனுமதயும் தரவில்லை.

    ஓய்வுபெற்ற அதிகாரி அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்த முடியாது. அவர்களுக்கு உத்தரவிட முடியாது. ஆனால் தேவநீதிதாஸ் தொடர்ந்து இந்த பணிகளை செய்து வருகிறார். ஆரம்ப காலம் முதல் கவர்னர் மாளிகை விதிகளை மீறி செயல்படுகிறது என கூறி வருகிறோம். தொடர்ந்து விதிகளை மீறியே வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர். #Narayanasamy #Governor
    ×