search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government colleges"

    • மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.

    தாராபுரம்:

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 2022-23 தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கையின் படி அரசு கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றம் துவக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கல்லூரிகளுக்கு 5 லட்சம் வீதம் வைப்பு நிதியாக வழங்க 5 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிதியின் வாயிலாக கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் ஆண்டுதோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் வைப்பு நிதியில் வட்டி கிடைக்காது என்பதால் போட்டிகள் நடத்த 36 லட்சம் ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் தமிழ் மன்றம் செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்த கூடாது.

    மாணவர் மன்ற போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை நடத்தும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில்,அரசு கல்லூரிகளில் தமிழ்த்துறை மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்த மன்றங்கள் உள்ளன. புதிதாக தமிழ் மன்றம் துவக்குவதால் மாற்றங்கள் ஏதும் அதில் இருக்க போவதில்லை. மாணவர்கள் சிலர் கட்சி சார்ந்த சாராத அமைப்புகளில் இருக்கின்றனர். இவர்கள் மன்ற செயல்பாடுகளை திசை திருப்ப வாய்ப்புள்ளது. மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.

    மன்ற செயல்பாடுகளுக்கு தெளிவான விதிமுறைகளையும் வகுக்க வேண்டியது அவசியம் என்றார்.

    • நம் இந்திய நாட்டை தவிர்த்து உலகம் முழுவதும் பல இயற்பியலாளர்கள் உலகின் தலைசிறந்த இயற்பியல் கண்டுபிடிப்புகளை அர்ப்பணித்துள்ளனர்.
    • முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பி.எஸ்சி இயற்பியல் படித்தவர் தான்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத, குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, தேவையின் அடிப்படையிலான பாடப்பிரிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர்களிடம் வரவேற்பு பெறாத பாடப்பிரிவுகள் மற்றும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை உயர்கல்வித்துறைக்கு கல்லூரி நிர்வாகங்கள் அனுப்பியது.

    அதில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், திட்டமலை, கூடலூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவுகளும், மொடக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவும், நாகலாபுரத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சேந்தமங்கலம் கல்லூரியில் கணிதம் பாட பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப் பிரிவும், நாகலாபுரம் கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவு நீக்கப்பட்டு, தமிழ், லால்குடி மற்றும் வேப்பந்தட்டை கல்லூரிகளில் கணிதம் நீக்கப்பட்டு பயோ டெக்னாலஜி, கடலாடி மற்றும் மாதனூர் கல்லூரிகளில் கணிதம் நீக்கப்பட்டு வணிக நிர்வாகவியல், சத்தியமங்கலம் மற்றும் கூடலூர் கல்லூரிகளில் கணிதம் நீக்கப்பட்டு தாவரவியல், பரமக்குடி அரசு மகளிர் கல்லூரியில் கணிதம் நீக்கப்பட்டு பொருளியல் தமிழ் வழி பாடப்பிரிவும், மொடக்குறிச்சி கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவு நீக்கப்பட்டு விலங்கியல், திட்டமலை கல்லூரியில் கணிதம் ஆங்கில வழி நீக்கப்பட்டு, இதற்கு பதிலாக கணிதம் தமிழ் வழி, கோவில்பட்டி கல்லூரியில் கணிதம் தமிழ் வழி நீக்கப்படும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கடந்த ஜூன் 15-ந்தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மொத்தம் 12 அரசு கல்லூரிகளில் நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் 9 கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இயற்பியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவுகள் தலா ஒரு கல்லூரிகளிலும் நீக்கப்பட்டுள்ளது. இதில் கணித பாடப்பிரிவு தான் அதிக அளவு கல்லூரிகளில் நீக்கப்பட்டுள்ளன.

    இயற்பியலும், வேதியியலும் இந்தியாவிற்கு நோபல் பரிசுகள் பெற்றுத்தந்த பாடப்பிரிவுகள் ஆகும். ஆனால் கணிதம் நமக்கு ராமானுஜம் என்ற மாமேதையை உருவாக்கி தந்தது என்கின்றனர் ஆசிரியர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க முந்தைய காலங்களில் மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.

    பிளஸ்-2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே கணிதம் பாடப்பிரிவு வழங்கப்பட்டது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு முக்கிய புள்ளிகளிடம் சிபாரிசுகளை பெற்று கூட இந்த பாடப்பிரிவுகளை எடுத்து படித்து வந்தனர்.

    கணிதம், இயற்பியல் பாடங்கள் கல்வியின் ஒரு முக்கியமான உயிர் நாடிகளாக திகழ்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இந்த பாடப்பிரிவுகள் அடித்தளமாக உள்ளன. எனவே இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் பாட துறைகள் தற்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் இந்த பாடப்பிரிவுகள் நீக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளன.

    கணிதம் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் சிறப்பு நாம் பயிலும் கல்வியில் மட்டும் அல்லாமல் தொழில் செய்வதற்கும், வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி தொழிலிலும் மிகவும் மேன்மையாக விளங்குகிறது. ஒரு மனிதனுக்கு கணித அறிவு இல்லை என்றால் அவன் அன்றாட வாழ்க்கையில் திட்டமிட்டபடி நடக்க இயலாது.

    ஒரு தனி சாமானியனுடைய கணித அறிவு என்பது மிகவும் முக்கியமானது. கணித அறிவியல் வாழ்க்கை நடத்துவதற்கு மட்டுமல்லாமல் நல்ல ஒரு சிந்தனையை செயல்படுத்துவதற்கும், வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கும் இது மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது.

    ஒரு மாணவன் கணிதம் சரியாக பயிலவில்லை என்றால் அவன் சிந்திக்கும் திறன் குறைவாக இருக்கும். கணித அறிவு இல்லாமல் ஒரு மனிதனால் எந்த ஒரு செயலையும் தொழிலையும் திட்டமிட்டபடி நடத்த இயலாது.

    ஒரு மாணவன் கணிதத்துறை பயிலாமல் இயற்பியல், வேதியியல், புள்ளியல் என மற்ற எந்த துறை படித்தாலும் அதில் கணிதம் என்பது ஒரு அடிப்படையான பாடம். கணிதம் இல்லாமல் எந்த பாடப்பிரிவும் இல்லை. எனவே ஒரு மாணவன் கணிதம் படிப்பது மிக முக்கியம். பொறியியல் துறையில் கணிதம் தான் முக்கிய பாடமாக உள்ளது.

    கணிதம் படித்த ஒரு மாணவன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அனிமேஷன் வடிவமைப்பு, கட்டிடக்கலை, விளையாட்டுத்துறை, மக்கள்தொகை புள்ளியியல், வானியல், இசை, ஓவியம், பேஷன் டிசைனிங், வேளாண்மை போன்ற துறைகளில் சிறப்பாக வல்லமை படைத்து பணி புரிவார்கள்.

    இது மட்டுமில்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கு கணிதத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஒரு கல்லூரியில் இருந்து கணிதம் துறை நீக்கப்பட்டால் மற்ற துறைகளில் கணிதம் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு எப்படி, யார் கணிதம் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழும்புகிறது.

    சென்னை, கோவை, மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கணிதம் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

    மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் பாடப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இயற்பியல் துறையின் சாதனைகள் மூலம் நம் இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கும் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் மிகுந்த பங்களித்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இயற்பியல் பாடப்பிரிவை இக்கல்லூரியிலிருந்து நீக்கி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    உதாரணத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பி.எஸ்சி இயற்பியல் படித்தவர் தான். அவர் விஞ்ஞானத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். மேலும் நாம் வருடம் தோறும் கொண்டாடப்படும் தேசிய அறிவியல் தினம் ஒரு இயற்பியல் விஞ்ஞானியின் சாதனையை நினைவு கூரவே கொண்டாடுகிறோம்.

    அப்படிப்பட்ட பெருமைக்குரிய சாதனை நிகழ்த்தப்பட்ட நாள் தான் பிப்ரவரி 28., சர்.சி.வி.ராமன், ராமன் விளைவை கண்டுபிடித்தார். இது இன்று வரை உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் பங்களித்துக் கொண்டிருக்கிறது.

    மேலும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாய் இயற்பியல் படித்தவர் தான். இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல சாதனைகளை படைத்துள்ளது. இதற்கு இயற்பியலின் பெரும் பங்கு உள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு இயற்பியல் மிகுந்த பங்கு வகிக்கிறது. மேலும் பல இந்திய இயற்பியல் விஞ்ஞானிகள் பல சாதனைகளை நாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளனர். உதாரணத்திற்கு ஹோமி பாபா இந்திய அணு அறிவியலின் தந்தை என்று பெருமைப்படுகிறோம் அவரும் இயற்பியல் படித்தவர் தான்.

    அணு அறிவியலின் தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்திற்கு மிகுந்த பங்களிப்பை செலுத்துகிறது. மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் இயற்பியலின் வழி வந்தவர்களே உதாரணத்திற்கு டாக்டர் சத்தியந்திரநாத் போஸ், சுப்ரமணியம் சந்திரசேகர், ஜெகதீஸ் சந்திரபோஸ் மற்றும் மேகநாத் ஷா போன்றவர்கள் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்காக தங்களின் இயற்பியல் கண்டுபிடிப்பு மூலம் பெரும் பங்கை வகித்துள்ளனர்.

    நம் இந்திய நாட்டை தவிர்த்து உலகம் முழுவதும் பல இயற்பியலாளர்கள் உலகின் தலைசிறந்த இயற்பியல் கண்டுபிடிப்புகளை அர்ப்பணித்துள்ளனர். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நியூட்டன், மேரி கியூரி, பெரி க்யூரி, ரிச்சர்ட் பைன்மேன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற பல இயற்பியல் விஞ்ஞானிகள் உலகின் வளர்ச்சிக்காக தங்களின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் பங்கு வகித்தனர்.

    மேலும் நாம் தற்போது பெருமையாக பேசப்படும் உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் இயற்பியல் படித்தவர் தான். இப்படிப்பட்ட உலகின் போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய இயற்பியல் துறையை கல்லூரியில் இருந்து நீக்கி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

    இதனால் மாணவர்கள் மட்டும் பாதிப்படையமாட்டார்கள் நாட்டின் வளர்ச்சியும், நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியும் பாதிப்படையும். இதை நீக்கினால் ஏறத்தாழ 15 வருடம் கழித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி முடங்கும் அபாயம் ஏற்படும்.

    எனவே உயர் கல்வித்துறை இதில் முழு கவனம் செலுத்தி அரசு கல்லூரிகளில் இருக்கும் பாடப்பிரிவுகள் குறித்து பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களிடம் எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

    ஒரு கல்லூரியில் ஒரு புதிய பாடப்பிரிவு கொண்டு வருதல் மகிழ்ச்சி, ஆனால் ஒரு பாடப்பிரிவினை நீக்கி அதற்கு பதிலாக மற்றொரு பாடப்பிரிவினை கொண்டு வருவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்.

    சில ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்வார்கள். அடுத்த சில ஆண்டுகளில் வேறு பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்வார்கள். எனவே அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வித்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

    அதேபோல் மாணவர்கள் எந்த துறை படித்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    எனவே தமிழ்நாடு அரசு இதில் முழு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி நீக்கப்பட்ட கல்லூரிகளில் மீண்டும் அந்தந்த துறைகளை கொண்டு வர வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்பான்மை பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    இதை செயல்படுத்த தமிழக முதலமைச்சரும், உயர்கல்வி அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • ஏராளமான மாணவிகள் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர்.

    கோவை:

    தமிழக அரசு கல்லூரிகளில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, புலியகுளம் அரசு மகளிர் கலை கல்லூரி மற்றும் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய 6 அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    இதில், கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலையில் பி.ஏ., பி.காம்.,பி.எஸ். சி. பி.பி.ஏ., உள்ளிட்ட 26 படிப்புகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், மொத்தம் 1,466 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்காக, 27 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதையடுத்து, தரவரிசை அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி அவர்களின் செல்போன் மற்றும் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு காலை 10 மணியளவில் தொடங்கியது. இதற்காக, விளையாட்டு பிரிவு மாணவர்கள் 700 பேர், சிறப்பு பிரிவு, என்.சி.சி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 200 பேர் என மொத்தம் 900 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்தாய்வில் பங்கேற்றனர். வருகிற 8-ந் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்க ளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மேலும், புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் நடப்பாண்டில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் உள்பட 5 பாடப்பிரிவுகளில் மொத்தம் 240 இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஏராளமான மாணவிகள் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்த னர்.

    • கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
    • ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    உடுமலை:

    தமிழகத்திலுள்ள உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில், வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி, வணிகவியல், கணக்கியல் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தனியார் கல்லூரிகள் போன்று அரசு கல்லூரிகளிலும், பல்வேறு தொழில் அமைப்பினர் 'கேம்பஸ் இன்டர்வியூ' வாயிலாக, மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றனர்.மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் பல இடங்களில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போதியளவில் விரிவுரையாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை.இதனால் கல்வி போதிப்பு பணியில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, உடனே காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    பல வருடங்களுக்கு முன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்-மாணவிகள் சேருவதை விட என்ஜினீயரிங் கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தார்கள். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு பெரிதும் காணப்பட்டது. என்ஜினீயரிங் படித்தாலே வேலை. மேலும் கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்தது.

    அந்த நிலை படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் வழக்கம் போல பி.காம். படிப்பில் சேர கடும்போட்டி நிலவியது.

    கடந்த 18-ந்தேதி பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் பல ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை முடித்தன. கல்லூரிகளின் வாசலில் மாணவர்களுடன் பெற்றோர்களும் காத்துக் கிடந்தனர். கல்லூரிகளில் மகள் அல்லது மகனுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. இடம் கிடைத்துவிட்டால் ஏதோ பணப்புதையல் கிடைத்தது என்று நினைக்கும் நிலையும் உருவானது.

    இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதையொட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் உத்தரவிட்டார்.

    இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபடிவங்கள் கடந்த 11-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த விண்ணப்பம் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவிகள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் வருகிற 29-ந் தேதி வரை வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை வினியோகம் செய்யப்படும். இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி மாணவிகள் பெற்று கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மாணவிகள் தங்களது சாதிசான்றிதழ்் நகலினை சமர்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குவிந்தனர். இதனால் மன்னர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்களை வாங்க மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியிலும் மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    மன்னர் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணி வரையிலும், அரசு மகளிர் கலை கல்லூரியில் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அந்தந்த கல்லூரியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    ×